Last Updated:
நிலக்கரி, விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கப்படும் தந்தூரி மற்றும் பார்பிக்யூ உணவு வகைகளின் தயாரிப்பு இதனால் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளதால், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் கரி அடுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பது உள்ளிட்ட காரணிகளால், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அச்சுறுத்தி வருகிறது. குளிர் காலங்களில் இதன் தாக்கம் இன்னும் மோசமடையும் சூழலில், தற்போது மூச்சுவிடவே சிரமப்படும் அளவிற்கு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது டெல்லி. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்று மாசின் அளவு 450 என்ற அபாய அளவை எட்டியதை அடுத்து, நான்காம் கட்ட கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியது.

இதன் எதிரொலியாக, நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரையில், முழுமையாக ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அனைத்துவிதமான கட்டுமான பணிகளுக்கும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் உணவகங்களில் கரி அடுப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கப்படும் தந்தூரி மற்றும் பார்பிக்யூ உணவு வகைகளின் தயாரிப்பு இதனால் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உணவுத் தயாரிப்புகளின்போது வரும் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமன்றி டெல்லி முழுவதும் திறந்தவெளியில் எந்தவொரு பொருளையும் எரிப்பதற்கு முழுமையான தடை விதிப்பதாக முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ. 5,000 வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கும் டெல்லி மாநகராட்சிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
December 16, 2025 6:41 AM IST


