1996- ஆம் ஆண்டு கியூபாவில் நடந்தது என்ன?
‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) என்பது 1991 ஆம் ஆண்டு மியாமியில் வசித்து வந்த கியூபா-அமெரிக்கர்களால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. 1990-களில் கியூபாவின் மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக, ஆயிரக்கணக்கான கியூப மக்கள் சிறிய படகுகள் மூலம் கடல் வழியாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு தப்பியோட முயன்றனர். அவ்வாறு கடலில் தத்தளிக்கும் அகதிகளை சிறிய ரக விமானங்கள் மூலம், காப்பாற்றுவதே பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ அமைப்பின் முக்கிய நோக்கம். 1996- ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை காப்பற்ற வந்த ‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’-வின் இரண்டு விமானங்களை கியூபாவின் மிக்-29 (MiG-29) போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இந்தத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது, கியூபாவின் ராணுவ அமைச்சராக ரவுல் காஸ்ட்ரோ இருந்தார். சர்வதேச வான்வெளியில் வைத்து இந்த விமானங்களைத் தாக்குவதற்கு ரவுல் காஸ்ட்ரோ உத்தரவிட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அந்த விமானங்கள் தங்களது நாட்டின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக கியூபா அரசு தொடர்ந்து வாதிட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், தற்போது அமெரிக்க நீதித்துறை, ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக அதிகாரப்பூர்வக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. மியாமியின் ‘ஃப்ரீடம் டவர்’ (Freedom Tower) கட்டிடத்தில், விமானத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக நடைபெறும் விழாவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிடவுள்ளது.

வெறும் ராணுவத் தாக்குதல் மட்டுமல்ல!
‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) விமானச் சுட்டுவீழ்த்தல் விவகாரம், வெறும் ஒரு ராணுவத் தாக்குதல் மட்டுமல்ல. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கான பின்னணியை கொண்டது. அமெரிக்காவில் இருந்த ‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ அமைப்பை கியூபாவின் உளவு அமைப்பான The Wasp Network ஊடுருவி, பலரை அங்கு பணியமர்த்தியிருந்தது. இந்த அமைப்பில் இருந்த முக்கியப் பைலட்களில் ஒருவரான ஹுவான் பப்லோ ரோக் (Juan Pablo Roque) என்பவர் உண்மையில் ஒரு கியூப உளவு அதிகாரி.
விமானங்கள் சுடப்படுவதற்குச் சரியாக ஒரு நாளைக்கு முன்பு அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதி, அவர் திடீரென மியாமியிலிருந்து காணாமல் போனார். அடுத்த நாள், கியூபத் தொலைக்காட்சியில் உரைநிகழ்த்திய அவர், Brothers to the Rescue அமைப்பு கியூபாவில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். Brothers to the Rescue விமானங்கள் பறக்கும் துல்லியமான நேரத்தை கியூப ராணுவத்திற்கு முன்கூட்டியே கூறியதும் அவர்தான்.
தாக்குதலின் போது கியூபாவின் மிக்-29 போர் விமான பைலட்களுக்கும், அவர்களது கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடந்த ரேடியோ உரையாடல்களை அமெரிக்க உளவுத்துறை பதிவு செய்திருந்தது. விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட உடன், கியூப பைலட்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது. இது சர்வதேச அளவில் கியூபாவுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது.

உளவாளி!
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கியூபா மீது அமெரிக்கா என்ன மாதிரியான ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகிறது என்ற ரகசியங்களை கியூபாவுக்குக் கசியவிட்டது அமெரிக்க உளவு அமைப்பில் மிக உயர் பதவியில் இருந்த அனா பெலன் மான்டேஸ் (Ana Belen Montes) என்ற பெண். அவர் அமெரிக்காவின் Top Cuba Expert எனப் போற்றப்பட்டு வந்தார். ஆனால் ரகசியமாகக் கியூபாவின் உளவாளியாகச் செயல்பட்டார். இந்த விமான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு அவரது விசித்திரமான நடத்தையே அவர் பிடிபட முக்கியக் காரணமாக அமைந்தது. அவர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து 2023-ல் தான் விடுதலையானார்.
அமெரிக்கா கொண்டுவந்த புதுச்சட்டம்!
1996 ஆம் ஆண்டு நடந்த இந்த வான்வழித் தாக்குதல், பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கியூபா மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அமெரிக்கா ஹெல்ம்ஸ்-பர்டன் சட்டத்தை (Helms-Burton Act, 1996) கொண்டு வந்தது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை இந்தச் சட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக்கியது.

இந்தச் சட்டத்தின்படி, கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, கியூபாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வரும் வரை எந்தவொரு அமெரிக்க அதிபராலும் தனிச்சையாகப் பொருளாதாரத் தடைகளை நீக்க முடியாது என்ற நிலை உருவானது. அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே இயக்கப்பட்ட அனைத்து நேரடி வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தையும் அதிபர் பில் கிளிண்டன் உடனடியாக ரத்து செய்தார்.
தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கர்களின் குடும்பத்தினர், மியாமி நீதிமன்றத்தில் கியூபா அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 187 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க கியூபாவுக்கு உத்தரவிட்டது. கியூபா இந்தத் தொகையைத் தர மறுத்ததால், அமெரிக்க வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த கியூபா அரசுக்குச் சொந்தமான நிதியிலிருந்து சுமார் 96 மில்லியன் டாலர்கள் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், இந்த ஒரே ஒரு சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்த 20 ஆண்டுகளுக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்காமல் உறவை முற்றிலுமாக தூண்டிவிட்டது.
புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ Vs யதார்த்தவாதி ரவுல் காஸ்ட்ரோ!
அமெரிக்கா என்ற உலகின் மிகப்பெரிய வல்லரசுக்கு, அதன் வீட்டு வாசலிலேயே… அதாவது வெறும் 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ‘சிம்ம சொப்பனமாக’ திகழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. மிகப்பெரிய புரட்சி மூலம் ஆட்சியில் அமர்ந்த பிடல் காஸ்ட்ரோ எடுத்த முதல் நடவடிக்கை கியூபாவில் செயல்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களை நாட்டுடமையாக்கியதுதான். இது அமெரிக்காவுக்கு விழுந்த முதல் பலத்த அடி.

காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்க, அமெரிக்காவின் CIA அமைப்பு கியூபாவில் இருந்து தப்பியோடிய எதிர்ப்பாளர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து, 1961-ல் கியூபாவின் Bay of Pigs வழியாகப் படையெடுக்கச் செய்தது. ஆனால், காஸ்ட்ரோ நேரடியாகக் களமிறங்கி, அமெரிக்காவின் இந்த படையெடுப்பை வெறும் 3 நாட்களில் முறியடித்தார். இது அமெரிக்க வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அவமானமாகப் பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, காஸ்ட்ரோ சோவியத் யூனியனுடன் கைகோர்த்தார்.
அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட சோவியத் நாட்டின் அணு ஆயுத ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்த அவர் அனுமதித்தார். இதனால் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் எல்லையருகே அணு ஆயுதங்களை கொண்டு வந்து நிறுத்திய காஸ்ட்ரோவின் இந்த அதிரடி, வாஷிங்டனை உலுக்கியது. காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் டுவைட் ஐசனோவர் (Dwight D. Eisenhower) முதல் பராக் ஒபாமா வரை 11 அதிபர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் காஸ்ட்ரோவை வீழ்த்தப் பல வழிகளில் முயன்றனர். 1965- ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க அதிபர்கள் 634 முறை, முயற்சி செய்தனர்.
வெடிக்கும் சிகரெட், விஷம் தடவிய சிகரெட், விஷக் குளிர்பானம், விஷம் கலந்த நீர்மூழ்கி உடை, காதலி மூலமாக விஷம், மேடையில் வெடிகுண்டு என பிடல் காஸ்ட்ரோவை கொல்ல எத்தனையோ முயற்சிகளை செய்தது அமெரிக்கா. ஆனால் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. பிடல் காஸ்ட்ரோவை விடவும் மிக நீண்ட காலம் கியூபாவின் ராணுவ அமைச்சராகவும், பின்னர் கியூபாவின் அதிபராகவும் இருந்தவர் ரவுல் காஸ்ட்ரோ. இவர் அமெரிக்காவுடன் ஒரு விசித்திரமான உறவைக் கொண்டிருந்தார்.
அண்ணன் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவைத் தீவிரமாக எதிர்த்த ஒரு ‘கருத்தியல் போராளி’ என்றால், தம்பி ரவுல் காஸ்ட்ரோ அமெரிக்காவைக் கையாள்வதில் ஒரு ‘யதார்த்தவாதி’ என்றே சொல்லலாம். ரவுல் காஸ்ட்ரோவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல் அமெரிக்காவுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட அமைதி ஒப்பந்தமாகும். 2008-ல் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து அதிபர் பதவியைப் பெற்ற பிறகு, கியூபாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவுடன் பேச ரவுல் முன்வந்தார். 2014 டிசம்பரில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ரவுல் காஸ்ட்ரோவும் 50 ஆண்டுகாலப் பகைமையை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக அதிரடியாக அறிவித்தனர். 88 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்குப் பயணம் செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை 2016- ஆம் ஆண்டு பராக் ஒபாமா பெற்றார். ஹவானா நகரில் ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்ட புகைப்படம் உலக வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது.

இரு நாடுகளிலும் மூடப்பட்டிருந்த தூதரகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. 2017-ல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானவுடன், ஒபாமா கியூபாவுடன் ஏற்படுத்தியிருந்த பல சுமுகமான ஒப்பந்தங்களையும், சலுகைகளையும் ரத்து செய்தார். கியூபா மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதனால் ரவுல் காஸ்ட்ரோவின் இறுதிக்கால ஆட்சியில் அமெரிக்காவுடனான உறவு மீண்டும் பழையபடி மோசமடைந்தது. பிடல் காஸ்ட்ரோவை கொல்ல முயன்றதை போலவே, ரவுல் காஸ்ட்ரோவையும் கொலை செய்ய அமெரிக்கா பலமுறை முயற்சி செய்தது.
1960-களிலேயே ரவுல் காஸ்ட்ரோ பயணிக்கும் விமானத்தை விபத்துக்குள்ளாக்க சிஐஏ திட்டமிட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த முயற்சி கைகூடாமல் போனது. கியூப ராணுவத்தை வழிநடத்திய மிகக் கடுமையான கம்யூனிசவாதியாக ஆரம்பத்தில் ரவுல் இருந்ததால், அமெரிக்கா அவரை எப்போதும் மிகவும் ஆபத்தான மனிதராகவே பார்த்தது.
பழிதீர்க்க காத்திருக்கும் அமெரிக்கா?
94 வயதான ரவுல் காஸ்ட்ரோ தற்போது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று கியூபாவில் வாழ்ந்து வரும் நிலையிலும், அமெரிக்காவுக்கும் அவருக்குமான பகை இன்னும் ஓயவில்லை. 1996-ல் நடந்த ஒரு சம்பவத்திற்கு தற்போது ரவுல் காஸ்ட்ரோ மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தற்போது திட்டமிட்டுள்ளது.
கியூபாவின் முன்னாள் அதிபர் ஒருவரை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளியாக அறிவிக்க முயல்வது இதுவே முதல்முறை என்பதால், ரவுல் காஸ்ட்ரோவும் அமெரிக்காவும் தங்களது இறுதிப் புள்ளி வரை ஒரு தீராத பகையுடனேயே பயணிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

