தகர்க்கப்பட்ட ஈரான் பாலத்தின் சிறப்புகள்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளால் தகர்க்கப்பட்ட பாலத்தின் பெயர் B1. இது ஈரானின் அல்போர்ஸ் (Alborz) மாகாணத்தில் உள்ள கராஜ் (Karaj) நகரைத் தலைநகர் டெஹ்ரானுடன் இணைக்கும் மிக முக்கியமான பாலமாகும். Engineering Masterpiece என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் (Alborz) மலைத்தொடரில், செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கு இடையே கட்டப்பட்டுவந்தது. இத்தகைய கடினமான நிலப்பரப்பில், மிக ஆழமான பள்ளத்தாக்கைக் கடக்கும் வகையில் பாலத்தை அமைப்பது மிகப்பெரிய சவாலாகும். இதை ஈரானியப் பொறியாளர்கள் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டே சாத்தியமாக்கி வந்தனர்.
ஈரானின் பி1 பாலம்
இந்தப் பாலத்தின் தூண்கள் சுமார் 136 மீட்டர் உயரம் கொண்டவை. இது ஒரு 40 மாடி கட்டடத்தின் உயரத்திற்குச் சமம். மத்திய கிழக்கு நாடுகளிலேயே இவ்வளவு உயரமான தூண்களைக் கொண்ட பாலம் இது ஒன்றுதான். ஈரான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஒரு நாடு. இவ்வளவு உயரமான பாலம் நிலநடுக்கத்தின் போது ஊசலாடி உடைந்து விடாமல் இருக்க, அதிநவீன Seismic Isolators பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த Seismic Isolators ரிக்டர் அளவில் 7 முதல் 8 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் பெற்றவை. இரு முனைகளிலிருந்தும் பாலத்தின் பகுதிகளை ‘பேலன்ஸ்டு கேண்டிலிவர்’ (Balanced Cantilever) முறையைப் பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டு வந்தது. இது செயல்பாட்டிற்கு வந்திருந்தால், தினமும் லட்சக்கணக்கான வாகனங்களின் பயண நேரத்தை பாதியாகக் குறைத்திருக்கும்.
இந்த பாலத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும், இரண்டு முறை ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தின. இதில் பாலத்தின் மையப்பகுதி முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 95 பேர் காயமடைந்து உள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் இத்தாக்குதலை உறுதிப்படுத்தி, “ஈரானின் மிகப்பெரிய பாலம் வீழ்ந்துவிட்டது, இனி அது பயன்படாது” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் கொடுத்த பதிலடி…
ஈரானின் பாலம் தகர்க்கப்பட்டதற்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள 8 முக்கிய பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அந்த 8 பாலங்கள் பற்றிய விவரங்கள் இங்கே:
1) மிகவும் முக்கியமான பாலமான கிங் ஃபஹத் காஸ்வே (King Fahd Causeway), து சவுதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் மிக முக்கியமான கடல் பாலமாகும். இதன் நீளம் சுமார் 25 கிலோ மீட்டர். இந்த பாலம் தகர்க்கப்பட்டால் பஹ்ரைன் தீவு தேசத்தின் தரைவழித் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும்.
2) அடுத்தது ஷேக் சையத் பாலம் (Sheikh Zayed Bridge). அபுதாபியில் அமைந்துள்ள இது ஒரு நவீன பொறியியல் அதிசயம். இது அமீரகத்தின் போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமாக கருதப்படுகிறது.
3) மூன்றாவது, ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா பாலம் (Sheikh Jaber Al-Ahmad Al-Sabah Causeway) குவைத்தில் உள்ள இப்பாலம் உலகின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்று இதன் நீளம் சுமார் 36 கிலோ மீட்டர். குவைத் சிட்டியை அதன் வடக்குப்பகுதியுடன் இணைக்கும் இந்த பாலம் ஈரானின் ஏவுகணைகளுக்கு மிக அருகிலுள்ள இலக்காகும்.
4) அதேபோல அபுதாபியில் உள்ள மிகப்பழமையான மற்றும் மிக முக்கியமான பாலங்களில் ஒன்றான அல்-மக்தா பாலம் (Al-Maqta Bridge) பாலமும் இந்த வரிசையில் உள்ளது. இது அபுதாபி தீவையும் அதன் நிலப்பகுதியையும் இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடம்.
Al-Maqta Bridge
5) அல்-நபி கிங் ஹுசைன் பாலம் (Al-Nabi King Hussein Bridge) என்ற பாலம் ஆலன்பி பாலம் (Allenby Bridge) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜோர்டான் நதியின் குறுக்கே அமைந்துள்ள மிக முக்கியமான ஒரு இணைப்புப் பாலமாகும். ஜோர்டான் நாட்டையும், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியையும் இணைக்கிறது. இப்பிராந்தியத்தின் மிக முக்கியமான போக்குவரத்து முனையங்களில் இதுவும் ஒன்று. இதுவும் இந்தப் பட்டியலில் உள்ளது.
6) ஜோர்டான் நதியின் குறுக்கே அமைந்துள்ள மற்றுமொரு முக்கியமான இணைப்புப் பாலமான தாமியா பாலமும் (Damiya Bridge) இந்தப் பட்டியலில் ஒன்று. கிங் ஹுசைன் பாலத்தை விட அளவில் சிறியதாக இருந்தாலும், இப்பிராந்தியத்தின் தளவாடப் போக்குவரத்துக்கு முக்கியமானதாக உள்ளது.
7) ஷேக் கலீஃபா பாலம் (Sheikh Khalifa Bridge) – அபுதாபியின் நவீன நகர்ப்புற விரிவாக்கத்தில் இந்தப் பாலம் ஒரு மிக முக்கியமான அங்கமாகும். இது அபுதாபி நிலப்பகுதியை புகழ்பெற்ற சாதியத் தீவுடன் (Saadiyat Island) இணைக்கிறது. குடியிருப்புகள் மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையிலான ஒரு முக்கியப் பாதையாக இருப்பதோடு, அபுதாபியின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு.
8) அப்தூன் பாலம் (Abdoun Bridge) – ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானில் அமைந்துள்ள இது, அந்த நகரின் மிக முக்கியமான மற்றும் அழகான அடையாளங்களில் ஒன்றாகும். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
தயார் நிலையில் ஈரான்…
இந்தப் பாலங்களை தகர்க்க ஈரான் தனது ‘ஃபட்டாஹ்-2’ (Fattah-2) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் வளைகுடா நாடுகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தகர்க்கப்பட்ட அமெரிக்க போர் விமானம்!
ஈரானின் B1 பாலம் தகர்க்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன F-35 Lightning II போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. ரேடார்களில் சிக்காத ‘ஸ்டெல்த்’ (Stealth) தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை, ஈரானின் உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘பவார்-373’ (Bavar-373) வீழ்த்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.போர் தொடங்கியதிலிருந்து ஈரான் சுட்டு வீழ்த்தும் இரண்டாவது F-35 விமானம் இது.
இந்த விமானம் உலகின் மிக நவீனமான ஐந்தாம் தலைமுறை போர் விமானம். அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், “வானின் குவாட்டர்பேக்” (Quarterback) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் (American Football) ‘குவாட்டர்பேக்’ என்பவர் எப்படி அணியின் மூளையாகச் செயல்பட்டு, பந்தை யாரிடம் கொடுக்க வேண்டும், எப்படித் தாக்க வேண்டும் என்று வழிநடத்துவாரோ, அதே வேலையை இந்தப் போர் விமானம் வான்வெளியில் செய்கிறது. இந்த விமானம் வீழ்த்தப்பபட்டது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ராணுவ மற்றும் கௌரவ இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான மினா அல்-அஹ்மதி (Mina al-Ahmadi) மீது ஈரான் ஏவிய தற்கொலை படை டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலால் அங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் என்பதால் எண்ணெய் விலை ஒரே நாளில் 50% வரை உயர்ந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தை விட அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முடக்கப்படுகிறதா ஹார்முஸ் நீரிணை?
ஈரான் தனது கடற்படை மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக முடக்கப்போவதாக மீண்டும் எச்சரித்துள்ளது. ஈரான் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கடல் கண்ணிவெடிகளை அந்தப் பகுதியில் தூவியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வணிகக் கப்பல்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்த அஞ்சுகின்றன. “எங்கள் உள்கட்டமைப்புகள் தாக்கப்படும் வரை, சர்வதேச எரிசக்தி விநியோகத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்குத் துணையாகச் செயல்படும் இஸ்ரேல் மீதும் ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இவற்றைத் தடுத்தாலும், சில ஏவுகணைகள் ராணுவத் தளங்களுக்கு அருகில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மொஜ்தபா கமேனி – டெனால்ட் டிரம்ப்
முக்கியமாக டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் ஹைஃபா (Haifa) பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நேற்றைய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அவசரச் சேவை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கியத் துறைமுகமான ஹைஃபா பகுதியில் விழுந்த ஏவுகணையால் அங்குள்ள சில சரக்குக் பெட்டகங்கள் (Containers) தீப்பிடித்து எரிந்தன. இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ (Iron Dome) மற்றும் ‘ஆரோ-3’ (Arrow-3) பாதுகாப்பு அமைப்புகள் நேற்று ஏவப்பட்ட சுமார் 200 ஏவுகணைகளில் 85 சதவீதத்தைத் தடுத்து அழித்தன. இருப்பினும், ஈரானின் புதிய ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் சிலவற்றை இடைமறிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே சில ஏவுகணைகள் தரைப்பகுதியில் விழக் காரணமாக அமைந்தது. ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழிகளில் கழிக்க வேண்டியிருந்தது. பாதுகாப்பு கருதி இஸ்ரேலின் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல், ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் உயர்மட்டப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க தரைப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (Gen. Randy George) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெனரல் ஜார்ஜ் தனது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டுள்ளார். இதுவரை ஈரான் போர் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் மோதல்களாகவே இருந்து வருகிறது. ரேண்டி ஜார்ஜ், தரைப்படை வீரர்களை நேரடியாகப் போரில் இறக்குவதற்குத் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இது அவரின் நீக்கத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ், (General Christopher Laneve) 82-nd Airborne Division-ன் முன்னாள் தளபதி. எனவே, விரைவில் அமெரிக்கா ஈரானுக்குள் தரைப்படை தாக்குதலைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதிபர் டிரம்ப் ஏற்கனவே ஈரானின் முக்கியப் பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக எச்சரித்துள்ளார். ரேண்டி ஜார்ஜ் இத்தகைய “சிவிலியன்” உள்கட்டமைப்புத் தாக்குதல்களை சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது எனக் கருதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இப்போது அவர் நீக்கப்பட்டிருப்பதால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள் மற்றும் பொருளாதார மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் தீவிரமடையும்.
டொனால்ட் ட்ரம்ப்
இதனிடையே டிரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பேசுவதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். “நிஜமாகவே நீங்கள் தீவிரமாகச் செயல்பட விரும்பினால், நேற்று சொன்னதற்கு நேர்மாறாக இன்று பேசக்கூடாது. நீங்கள் தினமும் உங்களை நீங்களே முரண்படுத்திக் கொள்ள முடியாது” என்று மேக்ரான் சாடியுள்ளார். இதற்கு ஒரு நாள் முன்பு டிரம்ப் மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில அவதூறான கருத்துகளைப் பேசியிருந்தார். அதற்குப் பதிலளித்த மேக்ரான், “டிரம்பின் பேச்சு Neither elegant nor up to standard. அதற்குப் பதில் சொல்லக்கூடத் எனக்கு விருப்பமில்லை” என்று ஒதுக்கித் தள்ளினார்.
ஈரானின் இந்தப் பதிலடி நடவடிக்கைகளால் போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. “பாலத்திற்குப் பாலம்” அல்லது “விமானத்திற்குப் பாலம்” என்ற ரீதியில் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கி வருவது, ஒரு முழுமையான உலகப் போருக்கான அச்சத்தை அதிகரித்து வருகிறது.

