மேலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த 30 நாட்களில் அங்குள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்றி, கப்பல் போக்குவரத்தை சீரமைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக வாபஸ் பெற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
“Ships of the World, start your engines. Let the oil flow!” என அதிபர் டிரம்ப் தனது Truth Social Media-வில் பதிவிட்டுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முந்தைய 24 மணி நேரங்கள், உலகமே மூச்சடக்கி கவனித்த மிகக் கடுமையான “திக்திக்” நிமிடங்களாக இருந்தன. ஒருபுறம் சமாதானப் பேச்சுகளும், மறுபுறம் ராணுவத் தாக்குதல்களும் ஒரே நேரத்தில் அரங்கேறின. தோஹாவில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் முன்னிலையில் அமெரிக்க-ஈரான் பிரதிநிதிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவில் சூழலை கைக்குள் கொண்டு வந்த டிரம்ப்?
ஒப்பந்தத்தின் சரத்துகள் இறுதி செய்யப்படும் நிலையை எட்டிய அதே தருணத்தில், இஸ்ரேல் ராணுவம், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது. லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த ஈரானிய தூதர்கள், பேச்சுவார்த்தை விட்டு வெளியேறப்போவதாக எச்சரித்தனர். ஈரானிய ராணுவம் இஸ்ரேலை நோக்கி தங்களின் ஏவுகணைகளை ஏவத் தயார்படுத்தியது. இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குப் பதிலாக, போர் தீவிரமடையும் சூழல் உருவானது. சூழ்நிலை கைமீறிப் போவதை உணர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நள்ளிரவில் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பேச்சுவார்த்தையைக் கெடுக்கும் வகையில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்படுவதை கடுமையாகக் கண்டித்த டிரம்ப், லெபனானில் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தினார். பின்னர், லெபனான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்றும், இந்த ஒப்பந்தம் லெபனான் எல்லைப் பகுதிக்கும் பொருந்தும் என்றும் ஈரானுக்கு அமெரிக்கா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கத்தாரின் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தனித்தனி அறைகளில் அமர வைக்கப்பட்டு, விடிய விடிய Proxy பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டாலும், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்ற 3 மாதங்கள் ஆகும் என ஈரான் கூறியது. ஆனால், அமெரிக்கா நீரிணையை உடனே திறக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றது. இறுதியில் “30 நாட்களுக்குள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்படும்” என்ற சமரசப் புள்ளியில் இரு தரப்பும் இறங்கி வந்தன. ஈரானின் அணு உலைகளில் உள்ள யுரேனியத்தை எப்படி வீரியம் குறைப்பது என்பதில் அதிகாலை 4 மணி வரை விவாதங்கள் நீடித்தன. சர்வதேச அணுசக்தி முகமையின் நேரடி மேற்பார்வைக்கு ஈரான் இறுதியாகச் சம்மதித்தது.
அனைத்து முட்டுக்கட்டைகளும் உடைக்கப்பட்டு, இரு தரப்பும் ஒப்பந்தத்தின் இறுதி வரைவிற்குப் பச்சைக்கொடி காட்டின. 100 நாட்களுக்கும் மேலாக உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த, கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஒரு போர், இந்த 14 மணி நேரப் பரபரப்பான ராஜதந்திரப் போராட்டத்தின் மூலம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்?
இந்த அமைதி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, போர்க்கள ரீதியாக “யாருக்கும் நேரடி வெற்றி இல்லை” என்பதுதான் தற்போதைய உலக அரசியல் வல்லுநர்களின் கணிப்பு. ஏனெனில், இது இரு தரப்பும் தங்களின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இறங்கிவந்து செய்துகொண்ட ஒரு Compromise Deal தான் இது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் தங்களுக்குத் தேவையான சில முக்கிய ராஜதந்திர நகர்வுகளில் தற்காலிக வெற்றியைப் பெற்றுள்ளன. உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஹார்முஸ் நீரிணையை எந்தவிதக் கட்டணமும் இன்றி மீண்டும் திறக்க வைத்தது அமெரிக்காவின் பெரிய ராஜதந்திர வெற்றி. இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை சரிந்து, அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் வரும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
டிரம்ப்பின் மாஸ்டர் பிளான்!
தனது 80-வது பிறந்தநாளில் ஒப்பந்தத்தை முடித்துக் காட்டியதன் மூலம், “என்னால் மட்டுமே உலகப் போர்களை நிறுத்த முடியும்” என்ற தனது அரசியல் பிம்பத்தை அதிபர் டிரம்ப் பலப்படுத்தியுள்ளார். அமெரிக்கா விதித்திருந்த கடுமையான கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதால், ஈரானிய துறைமுகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும். ஈரானின் முக்கிய துறைமுகங்களான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg) மீண்டும் திறக்கப்பட உள்ளதால், உலக சந்தைக்கு ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் LNG விநியோகம் எவ்வித தடையுமின்றி நடைபெறும்.
ஹார்முஸ் நீரிணையை பொறுத்தவரை, போரின் போது பாதுகாப்பு தேடி ஹார்முஸ் மற்றும் ஓமான் வளைகுடா பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சரக்குக் கப்பல்கள் முதலில் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும். பழைய கப்பல்கள் வெளியேறிய பிறகே, புதிய கப்பல்கள் துறைமுகங்களை நோக்கி வர முடியும். கடல் வழித்தடத்தில் ஏற்படும் இந்த “போக்குவரத்து நெரிசலை” சீரமைக்கவே 2 முதல் 3 வாரங்கள் தேவைப்படும். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானின் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட உள்ளது ஈரானின் சரிந்த பொருளாதாரத்திற்கு இந்த பணம் மிகப்பெரிய ஊக்கத்தை தரும்.
நட்பு நாடுகளை காப்பாற்றிய ஈரான்!
லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவை ஒப்புக்கொள்ள வைத்ததன் மூலம், ஈரான் தனது நட்பு அமைப்பான ஹெஸ்பொல்லாவை முழுமையான அழிவிலிருந்து காத்துள்ளது. ஈரானிய அரசு ஊடகங்கள் இதனை தங்களின் “பெரிய ராஜதந்திர வெற்றி” என்றே கொண்டாடுகின்றன. அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியாகப் பார்த்தால், இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஒரு பெரிய தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானை முற்றிலுமாக ஒடுக்க நினைத்த இஸ்ரேலின் திட்டங்களுக்கு இந்த போர்நிறுத்தம் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஈரானை முடக்குவதன் மூலம் அதன் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளை முற்றிலும் துடைத்தெறிய இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் லெபனான் எல்லை உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், அந்த அமைப்புகள் தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இஸ்ரேல் எப்போதுமே ஈரானை ஒரு அச்சுறுத்தலாகக் காட்டி, அதன் மீது கடுமையான சர்வதேசத் தடைகள் நீடிக்க வேண்டும் என்றே விரும்பியது. ஆனால், அமெரிக்கா தனது சொந்தப் பொருளாதார நலன்களுக்காகவும் ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுடன் நேரடியாக உடன்பாடுகளுக்குச் சம்மதித்தது இஸ்ரேலுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேலுக்கு விழுந்த பலத்த அடி…
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்திற்குத் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். “ஈரானை அதன் அணுசக்தி இலக்குகளை அடையும் முன்பே ஒழிக்கக் கிடைத்த நல்ல வாய்ப்பை அமெரிக்கா தடுத்துவிட்டது” என்று இஸ்ரேல் ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. போர்க்களத்தில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தினாலும், அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக இஸ்ரேலின் பிடிவாதத்தைக் பொருட்படுத்தாமல் ஈரானுடன் கைக்கோர்த்துள்ளது. இதனால் பிராந்திய அரசியலில் இஸ்ரேலின் வியூகம் தற்போதைக்கு பலத்த அடி வாங்கியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்த போரின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ‘வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருக்குப் பின் அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார். போர் தொடங்கியதில் இருந்து அவர் பொதுவெளியில் தோன்றவே இல்லை. ஆனால், அவரிடமிருந்து ரகசியமாகப் பெறப்பட்ட இறுதி ஒப்புதலின் பேரில் தான் ஈரானிய தூதர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இறுதி ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? முழு விவரம்:
ஈரானிய செய்தி நிறுவனமான ‘மெஹ்ர்’ (Mehr) கசியவிட்டுள்ள 14 அம்ச ரகசிய குறிப்புகளின்படி, இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை அடுத்த 60 நாட்களில் சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடரவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஈரான் வர வேண்டும் என்பதற்காகவே, வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானின் 24 பில்லியன் டாலர் சொத்துக்களில், பாதி தொகையை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே “அட்வான்ஸாக” விடுவிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக மத்திய கிழக்கில் நடந்த இந்த போர், உலக வரலாற்றிலேயே கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மிக மோசமான விநியோகத் தடையாகும். ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி கப்பல்களை சிறைபிடித்தது; அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டது. நேற்று உடன்பாடு எட்டப்படும் என்ற செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4% க்கும் மேல் சரிந்து, உலகப் பொருளாதார வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) என்ன செய்வது என்ற முட்டுக்கட்டைக்கு ஒரு சுவாரசியமான தீர்வு காணப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலைகளில் உள்ள ஆபத்தான யுரேனியம் முழுவதையும் பாதுகாப்பாகத் தனது நாட்டுக்கு எடுத்துச் செல்ல ரஷ்யா முன்வந்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
போர் ஏற்படுத்திய சேதங்கள்!
100 நாட்களைத் தாண்டி நீடித்த இந்த அமெரிக்க-ஈரான் நேரடி மோதல், இரு தரப்பிலும் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் பேரழிவுகளையும், ஈடுகட்ட முடியாத மனித மற்றும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிநவீன பதுங்கு குழி அழிப்பு குண்டுகள் (Bunker-buster bombs) மற்றும் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தளபதிகள் உயிரிழந்துள்ளனர். லெபனான், சிரியா மற்றும் ஈரானின் கடலோரப் பகுதிகளில் நடந்த போரினால் 30,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல்- ஈரான் என இரு நாடுகளும் தங்களின் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் மத்திய கிழக்கில் உள்கட்டமைப்புகள் தரைமட்டமாகின. ஈரானின் நதான்ஸ் (Natanz) உள்ளிட்ட முக்கிய அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பந்தர் அப்பாஸ் துறைமுக உள்கட்டமைப்புகள் அமெரிக்கத் தாக்குதல்களால் 60% வரை சேதமடைந்துள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் நடந்த கடற்போர் மற்றும் ஈரானின் நீர்மூழ்கிக் குண்டுகளால் அமெரிக்காவின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள 3 போர்க்கப்பல்கள் மற்றும் பல ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் பலத்த சேதமடைந்தன. இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தை மந்தநிலையின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.
அமெரிக்கா – ஈரான் பிரச்சனை
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20% க்கும் மேல் பங்களிக்கும் ஹார்முஸ் நீரிணை ஈரான் மூடியதாலும், அமெரிக்கா விதித்த இரட்டை முற்றுகையாலும் உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் மட்டும் ஒரு டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணங்கள் 500% வரை உயர்ந்ததால், நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. போர் உச்சத்தில் இருந்தபோது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110-ஐத் தாண்டியது. இதனால் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பணவீக்கத்தை (Inflation) எதிர்கொண்டன. பெட்ரோல், டீசல் விலை உள்நாடுகளில் கணிசமாக உயர்ந்தது.
இந்த போரில், நேரடியாக பங்கேற்காத போதிலும் மிகப்பெரிய பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்தது அரபு நாடுகள்தான். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் மற்றும் ஈராக் நாடுகள் சந்தித்த இழப்புகள் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் Economic Model-யை உலுக்கியுள்ளது.
அரபு நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் சரிவைச் சந்தித்துள்ளது. வளைகுடா நாடுகள் வெளிநாட்டினருக்கும், முதலீட்டாளர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பான புகலிடம்” என்ற நீண்டகால உலகளாவிய பிம்பம் இந்த 3 மாதங்களில் சுக்குநூறாகி போனது. மத்திய கிழக்கு வான்பரப்பு முழுமையாக மூடப்பட்டதால், சர்வதேச விமான நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. இதனால் எரிபொருள் செலவு அதிகரித்து, உலகளவில் விமானக் கட்டணங்கள் 40% வரை உயர்ந்தன.
போர் கற்றுக்கொடுத்தப் பாடம்!
இந்த போர் காட்டியுள்ள பாடம் என்னவென்றால், நவீன உலகில் ஒரு பிராந்தியப் போர் என்பது அந்த இரு நாடுகளை மட்டுமே பாதிப்பதில்லை; அது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உடைத்துவிடும் என்பதாகும். தற்போது எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், இந்த மாபெரும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அவசியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இது வரலாற்றின் “மிகப்பெரிய போர்” அல்ல. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பைத் தாக்கி, ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிய மிக உக்கிரமான நவீனப் போர் இதுதான்.

