ஈரான் மீதான அமெரிக்காவின் “No Quarter” மிரட்டல் சர்வதேச சட்டங்களை மீறுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அதில் “மன்னிப்புக்கோ, கருணைக்கோ இடமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த “No Quarter” மிரட்டல் எல்லா நேரங்களிலும் விடுக்கப்படுவதில்லை. எதிரி நாட்டை உளவியல் ரீதியாக உடைக்க அல்லது ஒரு போரை விரைவாக முடிக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
“No Quarter” என்பது வெறும் ஒரு போர்ச் சொல் அல்ல. அது மனிதநேயமற்ற தன்மையின் உச்சக்கட்டத்தை உணர்த்தும் ஒரு கொடூரமான அறிவிப்பாகும்.
போரில் ஒரு வீரர் தான் தோற்றுவிட்டோம் என்பதை உணர்ந்து, ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு கைகளை உயர்த்தினால், அவரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பது நாகரிக உலக விதி. ஆனால் “No Quarter” என்று அறிவிக்கப்படும்போது அந்த வீரர் சரணடைய முடியாது. அவர் எவ்வளவு கெஞ்சினாலும், காயமடைந்திருந்தாலும் அவர் கொல்லப்பட வேண்டும்.
இந்தச் சொல் போரை கொள்கை மோதலாகவோ பார்க்காமல், ஒரு இனப்படுகொலையாக (Extermination) மாற்றி விடும்.
பீட் ஹெக்செத் (Pete Hegseth) போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் இச்சொல்லை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும்போது, அது கீழ்நிலை வீரர்களுக்கு எதிரி நாட்டு வீரர்களை கொல்லும் அனுமதியை வழங்குகிறது.
அதாவது, “எதிரிகளை நீங்கள் எவ்வளவு கொடூரமாகக் கொன்றாலும் உங்களைக் கேட்க யாரும் இல்லை” என்ற வெளிப்படையான அனுமதி. இது வீரர்களை மிருகங்களாக மாற்றும் ஒரு செல் ஆகும்.
“No Quarter” அறிவிக்கப்பட்டால், எதிரி வீரர் உயிரிழக்க தயாராகிவிடுவார். “எப்படியும் சாகப்போகிறோம், பிறகு ஏன் சரணடைய வேண்டும்? சாவதற்கு முன் இன்னும் சிலரைத் தன்னுடன் அழைத்துச் செல்வோம்” என்று அவர் இன்னும் கொடூரமாகப் போரிடுவார். இது போர்க்களத்தை ஒரு ரத்தக் காடாக மாற்றும்.
“No Quarter” என்ற சொல் சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் மிக ஆழமானவை. இது வெறும் ராணுவ உத்தரவாக இல்லாமல், நாடுகளுக்கு இடையிலான உறவை மாற்றியமைக்கும் ஒரு கருவியாக இருந்துள்ளது.
ஒரு நாடு “No Quarter” கொள்கையைப் பின்பற்றுகிறது என்று தெரிந்தால், மற்ற நாடுகள் அந்த நாட்டுடன் தூதரக உறவுகளை வைத்துக்கொள்ள அஞ்சும். இது அந்த நாட்டை உலக அரங்கில் ஒரு “தனிமைப்படுத்தப்பட்ட நாடாக” மாற்றும்.
18-ஆம் நூற்றாண்டில், கடற்கொள்ளையர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் “No Quarter” கொள்கையை அறிவித்தது. அதன்படி பிடிபடும் கடற்கொள்ளையர்களுக்கு எவ்வித விசாரணையும் இன்றி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை கடற்கொள்ளையை ஒழிக்க உதவியது என்றாலும், கடற்கொள்ளையர்களை மேலும் வன்முறையாளர்களாக மாற்றியது. “எப்படியும் தூக்குதான்” என்று தெரிந்ததால் அவர்கள் தப்பிப்பதற்காகக் கடற்படை வீரர்களைக் கொடூரமாகக் கொன்றனர்.
1850- ஆம் ஆண்டு முதல் 1864- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தைப்பிங் கலகம். இதுசீன வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான உள்நாட்டுப் போர். இதில் கிளர்ச்சியாளர்களும் அரசுப் படைகளும் ஒருவருக்கொருவர் “No Quarter” கொள்கையை அறிவித்து அதனை கண்டிப்பாக பின்பற்றினர். இதன் விளைவாக, சரணடைந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
சுமார் 3 கோடி பேர் உயிரிழந்தனர். இது மனித வரலாற்றிலேயே மிக அதிகமான உயிரிழப்புகள் நேரிட்ட போர்களில் ஒன்றாக மாறியது.
ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் “No Quarter” என்ற நேரடி ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் அர்த்தத்தை அப்படியே செயல்படுத்தும் பல கொடூர உத்தரவுகளை பிறப்பித்தார்.
1941 – ஆம் ஆண்டு, சோவியத் யூனியனுடனான போரில், ராணுவ அதிகாரிகளை போர்க்கைதிகளாக நடத்தக்கூடாது. அவர்களைக் கண்டவுடன் உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு Commissar Order என பெயர். இது சர்வதேச சட்டப்படி “No Quarter” என்பதன் நேரடிச் சொல்லாகும்.
மற்றொன்று 1942- ஆம் ஆண்டு ஹிட்லர் பிறப்பித்த கமாண்டோ உத்தரவு (Commando order)
ஐரோப்பாவில் பிரிட்டிஷ் மற்றும் கூட்டாட்சி நாடுகளின் கமாண்டோ வீரர்கள் பிடிபட்டால் அவர்கள் சீருடையில் இருந்தாலும், சரணடைய வந்தாலும் அவர்களைக் கைதிகளாக ஏற்கக்கூடாது. அவர்கள் அனைவரையும் உடனடியாகக் கொலை செய்ய வேண்டும் என்பது தான் இதன் சாரம்சம்.
ஐரோப்பிய சிறப்புப் படையினரின் தாக்குதல்களைக் கண்டு ஹிட்லர் பயந்ததால், அவர்களை எச்சரிக்கவும் அழிக்கவும் இந்த “No Quarter” பாணி உத்தரவைப் பயன்படுத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த நியூரம்பெர்க் விசாரணைகளில் (Nuremberg Trials), ஹிட்லரின் தளபதிகள் பலர் இந்த “No Quarter” பாணி உத்தரவுகளைச் செயல்படுத்தியதற்காகவே தூக்கிலிடப்பட்டனர்.
“No Quarter” என்ற நடைமுறை, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்வதேச சட்டங்களால் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டது.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ஆபிரகாம் லிங்கன் வெளியிட்ட லீபர் குறியீடு (Lieber Code) உத்தரவுதான், “No Quarter” நவீன போர்க்கால வழக்கங்களுக்கு எதிரானது என்று முதன்முதலில் குறிப்பிட்டது.
1907-ஆம் ஆண்டு ஹேக் ஒப்பந்தம் (hague), No quarter என்று அறிவிப்பதை தடை செய்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சரணடைந்த வீரர்களை பாதுகாப்பது கட்டாயம் என 1949- ஜெனீவா ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.
போர்க்களத்தில் ஒருவர் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு சரணடையும்போது, அவரைக் கொல்லுவது தற்காப்பு ஆகாது; அது படுகொலையாக கருதப்பட்டது. எனவே நாகரிகமடைந்த நாடுகள் இத்தகைய கொடூரத்தைப் பின்பற்றக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
எதிரி நாட்டு வீரருக்கு “நாம் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம்” என்ற நம்பிக்கை இருந்தால்தான் அவர் போரை நிறுத்துவார். “சரணடைந்தாலும் கொல்வார்கள்” எனத் தெரிந்தால், அவர் சாகும் வரை தீவிரமாகப் போரிடுவார். இது இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
போர் என்பது நாடுகளுக்கு இடையிலான மோதலே தவிர, தனிப்பட்ட மனிதர்களைக் கொன்று குவிக்கும் செயலல்ல என்ற கருத்து வலுப்பெற்றது. போரிட முடியாத நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பது ஒரு நாட்டின் கடமையாக மாற்றப்பட்டது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) “No Quarter” வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது, அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
சர்வதேச சட்டத்தின்படி, “No Quarter” என்று அறிவிப்பதே ஒரு போர்க்குற்றமாகும். ஹேக் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், “No Quarter” என்று மிரட்டுவதை நேரடியாகத் தடை செய்கிறது.
மேலும் அமெரிக்காவில் 1996-ல் இயற்றப்பட்ட போர்க்குற்றச் சட்டம் (War Crimes Act), ஜெனீவா ஒப்பந்தங்களை மீறுவதை ஒரு கிரிமினல் குற்றமாக அறிவிக்கிறது.
அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அமெரிக்க வீரர்கள் மற்ற நாடுகளின் மண்ணில் போர் புரியும்போது, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக, அவர்கள் மீது ICC விசாரணை நடத்த முடியும்.
ஹெக்செத்தின் இந்த “No Quarter” பேச்சு, எதிர்காலத்தில் அமெரிக்க தளபதிகளுக்கு எதிராக ICC பிடியாணை பிறப்பிக்க ஒரு வலுவான ஆதாரமாக அமையும்.
அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகள் சர்வதேச சட்டங்களை மதிக்கக் கூடியவர்கள்.
“No Quarter” பாணியில் போர் புரியும் ஒரு நாட்டிற்கு ராணுவ உதவி செய்வது, அந்த கூட்டாளி நாடுகளையும் போர்க்குற்றத்தில் பங்காளிகளாக்கும்.
ஈரான் இந்த விவகாரத்தை ஒரு சாதாரண அரசியல் பேச்சாகப் பார்க்காமல், சர்வதேச அளவில் அமெரிக்காவைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
ஈரான் தனது தூதரகம் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் “No Quarter” மிரட்டல் ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் ஐநா சாசனத்திற்கு எதிரானது என ஈரான் தனது கடிதத்தில் கூறியுள்ளது.
ஒரு நாட்டின் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக “படுகொலைகளை” தூண்டும் வகையில் பேசுவதை ஐநா அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இதனை ஒரு “நேரடி போர்க்குற்ற அறிவிப்பு” என்று கூறியுள்ளது.
அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறுவதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் ஈரான் ஆலோசித்து வருகிறது.
“அமெரிக்கா மன்னிப்பு வழங்காது என்றால், எங்கள் வீரர்களுக்குச் சரணடையும் எண்ணமே வராது; அவர்கள் இறுதிவரை ஒரு தற்கொலைப் படை போலப் போரிடுவார்கள்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா சர்வதேச விதிகளை மீறினால், தாங்களும் போர்க்கைதிகள் தொடர்பான சர்வதேச விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்றும் மறைமுகமாக மிரட்டியுள்ளது.
ஈரான் தனது அரசு ஊடகங்கள் வாயிலாக, “அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடாக மாறிவிட்டது” என்ற பிரச்சாரத்தை உலக அளவில் முன்னெடுத்துள்ளது.
“நாகரிகத்தைப் பேசும் அமெரிக்காவின் முகமூடி கிழிந்துவிட்டது” என்றும், “அவர்கள் ஐரோப்பிய நாடுகளின் சட்டங்களையும் மதிக்கவில்லை” என்றும் கூறியுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைகளையும், அதற்குப் பதிலடியாக ஈரான் அண்டை நாடுகள் மீது நடத்திய தாக்குதல்களையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களையும் ஐநா சாசனத்தையும் மதிக்க வேண்டியது அனைத்து நாடுகளின் கடமை என்றும், ஒரு நாட்டின் இறையாண்மையின் மீது படை பலத்தைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“No Quarter” போன்ற மிரட்டல்கள் மனிதாபிமானப் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைக் கண்டிப்பதோடு, இது ஒரு “அரசியல் தீர்வு” மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அணுகுமுறையை Cold War Mentality என்று சீனா சாடியுள்ளது. அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்த விரும்புவதாகவும், இது பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்றும் பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் “No Quarter” என்பது போர்க்களத்தில் வீரர்களை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான உத்தி. ஆனால், தற்போதைய நவீன உலகில், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் ஒரு நாட்டின் கௌரவமாகப் பார்க்கப்படும் சூழலில், இத்தகைய வார்த்தைகள் மீண்டும் ஒலிக்கத் தொடங்குவது நாகரிகத்தின் பின்னோக்கிய பயணத்தையே காட்டுகிறது.

