கோலாலம்பூர்:
நாடு முழுவதும் Coop Mart விற்பனை நிலையங்களைத் தொடங்குவதற்கும், அவற்றை இயக்குவதற்கும் ஆதரவாக, மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM) RM3 மில்லியனுக்கும் அதிகமான மூலதன நிதி மற்றும் வணிக மானியங்களை அங்கீகரித்துள்ளது.
“இந்த மூலதன நிதி (TMP) வாயிலாக இதுவரை RM1.17 மில்லியன் மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் மேலும் RM2.31 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளது.” என்று, துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறியனார்.
அவர் இன்று மக்களவையில் பேசும்போது, நாடு முழுவதும் தற்போது 2,623 Coop Mart விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் பல மக்கள் வீட்டுவசதி திட்டங்கள் (PPR) உள்ள பகுதிகளில், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தேவைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“மடானி கூட்டுறவு விற்பனைத் திட்டம் வழியாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுடன் இணைந்து, Coop Mart வலையமைப்பை விரிவுபடுத்த பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.Coop Mart போட்டித்தன்மையுடன் இருந்து, கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் நோக்கில் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று அவர் மேலும் கூறினார்.
“Coop Mart-விற்பனை நிலையங்களை மலிவு விலை, சமூக அடிப்படையிலான கடையாக பிராண்டிங் செய்தல், அதன் அடையாளத்தை தரப்படுத்தல், முக்கிய நகரங்களில் கருத்துரு (concept) கடைகளை அமைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் பகுதிகளாகும்” என்றார்.




