பெங்களூரு, : கர்நாடகாவில் நேற்று நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் காங்கிரசின் மூன்று, பா.ஜ.,வின் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றனர். ம.ஜ.த., வேட்பாளர் குபேந்திர ரெட்டி படுதோல்வி அடைந்தார். பா.ஜ., – எம்.எல்.ஏ., சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மற்றொரு பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார், ஓட்டு போடவே வராததால், அக்கட்சி தலைவர்கள் கொந்தளித்தனர்.
கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரசின் ஹனுமந்தையா, சையத் நாசிர் ஹுசேன், சந்திரசேகர்; பா.ஜ.,வின் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆகியோரின் பதவி காலம், வரும் ஏப்ரல் 2ல் முடிவடைகிறது.
இவர்களால் காலியாகும் இடங்களுக்கு, பா.ஜ., சார்பில் நாராயண கிருஷ்ணாச பந்தகே; காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மாகன், சையத் நாசிர் உசேன், சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
பஸ் பயணம்
வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும், சுயேச்சை, காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பெற்று வெற்றி பெறலாம் என்று கருதி, ம.ஜ.த., வேட்பாளராக முன்னாள் எம்.பி., குபேந்திர ரெட்டி களமிறக்கப்பட்டார். இதனால், நேற்று காலை ஓட்டுப்பதிவு நடந்தது.
ம.ஜ.த., – பா.ஜ., கூட்டணி கட்சிகளின் வலையில் சிக்க கூடாது என்பதற்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சொகுசு பஸ்கள் மூலம், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பாதுகாப்பில் விதான் சவுதாவுக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டனர்.
விதான் சவுதாவின் முதல் மாடியில் உள்ள அறை எண்: 106ல், ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
சிவராம் ‘ஆப்சென்ட்’
ராஜாஜி நகர் பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், முதல் நபராக ஓட்டு போட்டார். அதன் பின், அனைத்து கட்சி தலைவர்கள் வரிசையாக வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் காதர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, குமாரசாமி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட பலரும் மதியத்துக்குள் ஓட்டு போட்டனர்.
காலை 9:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 4:00 மணிக்கு நிறைவு பெற்றது. கர்நாடக சட்டசபையில் மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏ.,க்களில், சமீபத்தில் காங்., – எம்.எல்.ஏ., ஒருவர் காலமானதால், 223 ஓட்டுகள் பதிவாக வேண்டும்.
மாலை 4:00 மணிக்கு 222 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டிருந்தனர். எல்லாபூர் பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் மட்டும் ஓட்டு போட வரவில்லை.
மாலை 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு பெட்டிகளில் இருந்த ஓட்டு சீட்டுகளை எடுத்து, வாக்காளர்களின் வரிசை எண் படி தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டன.
100 ஓட்டு மதிப்பு
ஒவ்வொரு ஓட்டும், 100 ஓட்டுகள் மதிப்புடையதாகும். அந்த வகையில் இறுதியில், காங்கிரசின் அஜய் மாகன், 47 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் 4,700 ஓட்டுகளும்; சையத் நாசிர் உசேன், 47 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் 4,700 ஓட்டுகளும்…
சந்திரசேகர் 45 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், 4,500 ஓட்டுகளும்; பா.ஜ.,வின் நாராயண கிருஷ்ணாச பந்தகே, 47 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், 4,700 ஓட்டுகளும் பெற்று, வெற்றி பெற்றதாக, தேர்தல் அதிகாரி விசாலாட்சி அறிவித்தார்.
ம.ஜ.த.,வின் குபேந்திரரெட்டி, 36 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், 3,600 ஓட்டுகள் பெற்று, படுதோல்வி அடைந்தார்.
யஷ்வந்த்பூர் பா.ஜ., – எம்.எல்.ஏ., சோமசேகர், அக்கட்சி அறிவுறுத்திய வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காமல், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாகனுக்கு ஓட்டு போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
சுயேச்சை ஆதரவு
மேலும், ஒதுங்கி இருந்த குர்மித்கல் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், அக்கட்சி வேட்பாளருக்கே ஓட்டு போட்டு, நேர்மையை நிரூபித்தார்.
கர்நாடக சர்வோதயா கட்சியின் தர்ஷன் புட்டண்ணய்யா, கல்யாண மாநில பிரகதி கட்சியின் ஜனார்த்தன ரெட்டி, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான ஹரப்பனஹள்ளி லதா; கவுரிபிதனுார் புட்டசாமிகவுடா ஆகியோர், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதன் மூலம், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் திட்டம் பலித்தது. கூட்டணி கட்சிகளின் திட்டம் தவிடு பொடியானது. இதை காங்., தொண்டர்கள் இனிப்பு வழங்கி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறி கொண்டாடினர்.
ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டதாலும், மற்றொருவர் ஓட்டு போடுவதற்கு வராததை கண்டித்தும், பா.ஜ., – ம.ஜ.த., தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்