Last Updated:
அமன் தனது பாதயாத்திரையை கடந்த ஜூலை 3-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் இருந்து தொடங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு பாதயாத்திரையாக வந்துகொண்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் (Aligarh) பகுதியைச் சேர்ந்த அமன் என்ற இந்த இளைஞர், தனது பயணம் முழுவதும் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி இந்த நெடும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழக முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு அரசியல் பார்வை மீது தனக்குள்ள அசாத்திய ஈடுபாடே இந்த அசாத்திய முயற்சிக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமன் தனது பாதயாத்திரையை கடந்த ஜூலை 3-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் இருந்து தொடங்கினார். கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து சாலையில் பயணித்து வரும் அவர், மகாராஷ்டிராவைக் கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தின் அதிலாபாத் (Adilabad) மாவட்டத்தை வந்தடைந்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அமன், அடுத்து ஹைதராபாத் வழியாகத் தனது பயணத்தைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதாவது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் தமிழக எல்லையை வந்தடைந்து தனது இலக்கான சென்னையை எட்டிவிடுவார் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கும் போது அமன் அவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் முக்கிய விஷயங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான ஆட்சிக்காக முதலமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கப் போவதாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் விஜய் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் தேவைப்படுவதால், அவர் தேசிய அரசியலிலும் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அமன் தெரிவித்துள்ளார்.
மாநில எல்லைகளைக் கடந்து வரும் தனது இந்தப் பயணத்தின் போது, வழியில் சந்திக்கும் கிராம மற்றும் நகர மக்கள் தனக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் தங்குமிடம் தந்து உதவுவதாகவும், பலரும் தனது நோக்கத்தைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதாகவும் அமன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
CM விஜய்க்காக வடமாநில இளைஞர் செய்யும் அசாதாரண சம்பவம்.. உ.பி.யிலிருந்து சென்னை நோக்கி பாத யாத்திரை


