மாதவிடாய் காலத்தில் அசௌகரியம் நிலவுவதாக தெரிவித்து மருத்துவ விடுப்புக் கோரிய பெண்ணிடம், “நீங்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க, பேன்ட்டை கழற்றி நிரூபிக்க வேண்டும்’ என கட்டாயப்படுத்தியுள்ளது, பெய்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கெங்டன் இன்ஸ்டிடியூட் (Gengdan Institute of Beijing University of Technology). இதுதொடர்பான வீடியோ, கடந்த மே 15-ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக, சீனப் பல்கலைக்கழகத்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

வைரலாகிய அந்த வீடியோவில், ‘மாதவிடாய் வலி அனுபவிக்கும் அத்தனை பெண் மாணவிகளிடமும் இத்தகைய பரிசோதனைகள் நடத்தப்படுகிறதா’ என மாதவிடாய் விடுப்புக் கோரிய பெண் கேட்கிறார். அதற்கு, ‘இது இந்த பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை கொள்கை. இது நான் உனக்கு விதித்த தனிப்பட்ட விதி அல்ல. மாதவிடாய் விடுப்பு வேண்டுமென்றால், பேன்ட்டை கழற்றி மாதவிடாய் இருப்பதை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்காமல், விடுப்பு கடிதத்தை வழங்க இயலாது’ என ஒரு பெண் ஊழியர் பதிலளிக்கிறார். ஆனால், இந்த நடைமுறை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் கொள்கை என்பதை நிரூபிக்க, எந்த எழுத்துப்பூர்வ ஆதாரத்தையும், விடுப்பு மறுத்த அந்த பெண் ஊழியர் விடுப்புக் கோரிய மாணவியிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

