Last Updated:
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதி சுற்றை உறுதி செய்துள்ளன
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை 29 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தது. இந்நிலையில், அந்த தொடரில் இருந்து 5 நாட்களிலேயே அந்த அணி வெளியேறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன்ஷிப்பை மாற்ற வேண்டும் என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் களைகட்டி வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது. இதனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, லாகூர் நகரில் வைத்து வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் ஐசிசி தொடர் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
அண்மைக்காலமாகத்தான் சர்வதேச போட்டிகளே பாகிஸ்தானில் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு ஓர் அரிய வாய்ப்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கருதியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன் கோப்பையை தங்களது அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பாகிஸ்தான் அணி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கிரிக்கெட் தொடரை நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் நாடு பெற்றுள்ளது.
19ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நேற்று அதாவது 24ஆம் தேதி வெளியேறியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்திடமும் இரண்டாவது போட்டியில் இந்தியாவிடமும் தோல்வியடைந்தது. லீக் சுற்றில் நாளை மறுதினம் பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்து இருந்ததால் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதி சுற்றை உறுதி செய்துள்ளன. ஏற்கனவே பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் போட்டி தொடங்கிய 5 நாட்களிலேயே சாம்பியன் கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியுள்ளது.
February 25, 2025 6:53 AM IST


