Last Updated:
நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவிந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் சதம் அடித்தனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2 ஆவது அரையிறுதி போட்டியில் தற்போது நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்துள்ள நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
நேற்று துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2 ஆவது அரையிறுதி போட்டி தற்போது பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்திரா மற்றும் வில் யங் களம் இறங்கினர். யங் 21 ரன்களில் வெளியேற, அதன்பின்னர் இணைந்த கேன் வில்லியம்சன் மற்றும் ரவிந்திரா இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 164 ரன்கள் சேர்த்தனர். ரச்சின் ரவிந்திரா 101 பந்துகளில் 1 சிக்சர் 12 பவுண்டரியுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் 94 பந்துகளில் 2 சிக்சர் 10 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் தலா 49 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 362 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.
March 05, 2025 7:24 PM IST


