குரூப் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் உள்ள அணியை தான் அரையிறுதியில் எதிர்கொள்ளும். ஆனால், குரூப் ‘பி’ பிரிவில் எந்த அணியை எதிர்கொள்ளப் போகிறது என்பதே தற்போதைய கேள்வி. குரூப் ‘பி’ பிரிவில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இப்போதைக்கு முதல் இரண்டு இடங்களில் உள்ளன. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் அசாத்திய வெற்றி, அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. இதனால் மூன்றாவது அணியாக குரூப் ‘பி’ பிரிவில் அரையிறுதிக்கான ரேஸில் உள்ளது.
குரூப் பி பிரிவின் கடைசி இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவையும், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தையும் எதிர்கொள்ள இருக்கின்றன. இதில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்றால், அந்த அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெறும். மாறாக, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஆப்கனே அரையிறுதிக்கு முன்னேறும்.
அதேநேரம், ஆப்கானிஸ்தான் போட்டியில் தோற்றாலும் கூட ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி கொஞ்சமாக இருக்கிறது எனலாம். ஆனால், அது அதிர்ஷ்டமே. அதாவது தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்து அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறும் பட்சத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், தற்போதைய நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் ரன் ரேட் +2.140, ஆஸ்திரேலியா ரன் ரேட் +0.475.
அரையிறுதியில் இந்தியா யாரை எதிர்கொள்ளும்?
இந்தியா ஏற்கனவே இரண்டு வெற்றிகளுடன் அரையிறுதியை உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குரூப் ஏ பிரிவில் யார் முதலிடம் பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும். குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி, குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால், குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெறுவதோடு இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதேநேரம், இந்தியா நியூசிலாந்திடம் தோற்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடம் பெற்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வென்று, இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும். இந்தியா நியூசிலாந்திடம் தோற்றால், அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டும் தங்கள் போட்டிகளில் தோல்வியடைந்து, குரூப் ஏ பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும். ஒட்டுமொத்தத்தில், நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் வெற்றியும், குரூப் பி பிரிவில் எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதைப் பொறுத்தும், இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரையிறுதியில் மோதுவது அமையும்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 27, 2025 10:58 AM IST

