Last Updated:
களிமண் கலையை மக்களிடம் கொண்டு வந்த ‘மதராசி ஸ்டுடியோ’ ஷிவானியின் வெற்றிப் பயணம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பொதுவாக நாம் பயன்படுத்தும் பொருட்கள் இயந்திரங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் களிமண்ணை கலை வடிவமாக மாற்றி, அதை மக்களிடம் அனுபவமாக கொண்டு வந்தவர் ‘மதராசி ஸ்டுடியோ’ நிறுவனர் ஷிவானி. சிறுவயதிலிருந்தே கைவினை மீது ஆர்வம் கொண்ட அவரின் வாழ்க்கையில் மண்பாண்ட பயிற்சி முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
குடும்பத்தின் ஆதரவுடன் சுமார் 10 முதல் 15 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்த ஸ்டுடியோ, இன்று பலருக்கு களிமண் கலை கற்றுக்கொடுக்கும் மையமாக வளர்ந்துள்ளது. தொடக்கத்தில் சவால்களை சந்தித்தாலும், முதல் ஆறு மாதங்கள் சொந்த முதலீட்டில் இயங்கி, பின்னர் பயிற்சி வகுப்புகள் (workshops) மூலம் மெதுவாக வளர்ச்சி பெற்றதாக ஷிவானி கூறுகிறார்.
இங்கு செராமிக் மற்றும் டெரகோட்டா கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வடிவமைப்பு முதல் Glazing, Firing வரை முழுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 10 நாள், 15 நாள், ஒரு மாதம் போன்ற பல்வேறு காலஅளவுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுடன், ‘கிளே ப்ளே’ போன்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்களுக்கும் கற்றல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு உருவாக்கப்படும் கலைப்பணிகள் வெளிநாடுகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பயிற்சியின் மூலம் பலர் தங்கள் சொந்த சிறு தொழில்களைத் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களை பயன்படுத்தி விளம்பர செலவின்றி வளர்ந்த இந்த ஸ்டுடியோ, தற்போது லாபகரமான தொழிலாக மாறியுள்ளது.
கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ.1,200, பெரியவர்களுக்கு ரூ.1,400, முழுமையான செராமிக் பயிற்சிக்கு ரூ.1,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தம்பதியினருக்கான ‘Couples Play Date’ போன்ற தனிப்பட்ட அனுபவங்களும் வழங்கப்படுகின்றன.
Apr 01, 2026 10:36 AM IST

