பெங்களூரு ; ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, இன்னும் இரண்டு நாட்களில் அரசிடம் தாக்கல் செய்யப்பட இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, முதல்வர் சித்தராமையா தயாராகி வருகிறார்.
கர்நாடகாவில் 2013 – 2018 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா, பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மக்களை கண்டறிய, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி காந்தராஜ் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார். இதற்காக, 165 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி இருந்தது.
இந்நிலையில், 2019ல் குமாரசாமி முதல்வராக இருந்த போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்பின், முதல்வராக இருந்த பா.ஜ.,வின் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரும் அறிக்கையை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
கால நீட்டிப்பு
இதற்கிடையில், ஆணையத்தின் தலைவர் காந்தராஜ் ஓய்வு பெற்று, புதிய தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டே நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தது.
சித்தராமையா மீண்டும் முதல்வர் ஆனார். நிலுவையில் இருந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய, ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால், அந்த அறிக்கையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்ததால், ஆணையத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே, அரசிடம் அவகாசம் கேட்டு இருந்தார்.
இதற்கிடையில், அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே முடிந்தது. ஆனாலும் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, அவரது பதவிக்காலம், இந்த மாதம் 29ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை அவரது பதவிக்காலம் முடிய உள்ளது. இதனால் இன்றோ அல்லது நாளையோ, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசிடம் அவர் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து விட்டதாகவும், முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டியது மட்டும் தான் மிச்சம் என்றும், ஆணைய உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.
‘இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை என்றும், வீட்டில் இருந்தபடியே அதிகாரிகள் அறிக்கை தயாரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அறிக்கையை தாக்கல் செய்ய, ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
துணை முதல்வர்
இது தொடர்பாக ஒக்கலிகர் சமூகம், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், அந்த சமூகத்தை சேர்ந்தவரான துணை முதல்வர் சிவகுமார் கையெழுத்து போட்டதும், பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பாவும் பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு, பா.ஜ.,வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘அறிக்கை இன்னும் என் கைக்கு வரவே இல்லை. அதற்குள் பிரச்னை செய்தால் எப்படி.
அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு, அதன்பின்னர் விவாதம் செய்யலாம். இந்த அறிக்கைக்காக 165 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது’ என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
மறுபக்கம், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்கும்படி தலித் சமூக அமைச்சர்களும், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அரசு உறுதி
சமீபத்தில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில், அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெற, அரசு உறுதியாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறி இருந்தார்.
இதன்மூலம் முதல்வர் சித்தராமையா அறிக்கையை பெற்று, அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும், அறிக்கையை அவர் வாங்கியதும், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பும் சூழ்நிலையும் உள்ளது. ஆனாலும், நெருக்கடியை சமாளிக்க, அவர் தயாராகி வருகிறார்.
அறிக்கை தாக்கல் ஆனபின் தான், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்கள் பற்றி தெரியவரும். இதனால், அறிக்கைக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்