சிறுவனிடம் ரூ.12 லட்சம் மோசடி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது வழக்கு
பெங்களூரு: கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டிகளில், விளையாட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, 16 வயது சிறுவனிடம், 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த பயிற்சியாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சியாளராக பணியாற்றுபவர் கவுரவ் திமான், 40. அந்த மையத்தில் ராஜாஜி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றார்.
கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று, விளையாட வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுவனிடம், கவுரவ் திமான் கூறி உள்ளார்.
இதை நம்பிய சிறுவனும், பயிற்சியாளர் கேட்கும் போது எல்லாம் பெற்றோரிடம் இருந்து, அவ்வப்போது பணம் வாங்கி வந்து, 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்துஉள்ளார்.
ஆனால், கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க, சிறுவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி, சிறுவனின் தந்தை ஷியாம் பிரசாத், கவுரவ் திமானிடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்க மறுத்ததுடன், மிரட்டியதாகவும் தெரிகிறது.
இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பெங்களூரு நீதிமன்றத்தில் ஷியாம் பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதி, கவுரவ் திமான் மீது வழக்கு பதிவு செய்ய, உப்பார்பேட் போலீசுக்கு உத்தரவிட்டார். இதன்படி, அவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனியில் 98 புகையிலை மூடைகள் பறிமுதல் அண்ணன், தம்பி கைது
தேனி: கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து தேனி கோடவுனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2.80 லட்சம் மதிப்பிலான 98 புகையிலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து அண்ணன், தம்பியை கைது செய்தனர். கோடவுனுக்கும் சீல் வைக்கப்பட்டது.
ராஜஸ்தான் ஜோலோர் மாவட்டம் கேசவனா பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் 38, சகோதரர் பூமாராம் 26. இவர்கள் தேனி சுப்பன்செட்டி தெருவில் செருப்பு கடை நடத்துகின்றனர். புதிய செருப்புக்களை அருகில் உள்ள கோடவுனில் இருப்பு வைத்து பயன்படுத்தினர்.
![]() |
நேற்று அதிகாலை 1:00 மணியளவில் தேனி இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையில் எஸ்.ஐ., ஜீவானந்தம், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராமமூர்த்தி, அம்சபாண்டி, சதிஸ், சசிக்குமார் அடங்கிய போலீசார் சுப்பன்செட்டி தெருவில் ரோந்து சென்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை கண்டதும் ஒரு கார் வேகமாக சென்றது. சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் இருந்த கோடவுனை சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட போதை புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூடைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த ரூ.2.80 லட்சம் மதிப்பிலான 712 கிலோ எடையுள்ள 98 புகையிலை மூடைகளை பறிமுதல் செய்து, சுரேஷ், பூமாராமை கைது செய்தனர்.
மாவட்ட நியமன அலுவலர் ராகவன், தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்து புகையிலை பதுக்கிய கோடவுனுக்கு ‘சீல்’ வைத்தனர்.
உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
20 பவுன் நகை பணம் திருட்டு
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காமராஜ் நகர் முதல் தெருவில் வசிப்பவர் முருகேசன்; தனியார் நிறுவனத்தில் ஆடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். பிப். 20ல் சென்னையில் உள்ள பிள்ளைகளை பார்க்க மனைவி ஜெயஸ்ரீயுடன் சென்று விட்டார்.
நேற்று முன்தினம் இவரது வீட்டின் கதவு, பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை உடைத்து லாக்கரில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி பொருள், ரூ.32 ஆயிரம் என ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்றனர். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர். இங்கு தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கர்நாடகா பஸ் மோதி இருவர் பலி பொதுமக்கள் கோபத்தால் சூறை
செங்கம் : திருச்சியிலிருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த, ‘ராயல்’ என்ற ஆம்னி பஸ், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு டயர் பஞ்சரானது.
பஸ் டிரைவர் அன்பு, 52, அப்பகுதியில், பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வரும் பிரசாந்த், 25, என்பவரிடம் சென்று, பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தார். அவர்கள் நிற்பதை கவனிக்காமல், பெங்களூரிலிருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற கர்நாடகா அரசு பஸ் இருவர் மீதும் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அதிர்ச்சியடைந்த கர்நாடகா அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கர்நாடகா அரசு பஸ்சை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
செங்கம் போலீசார், கர்நாடக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தேடி வருகின்றனர்.
ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வீட்டு மனை வரன்முறை செய்து அனுமதியளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., சேவுகப்பெருமாள் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த அப்துல்காதர் மகன் முகமது ெஷரீப் ேஷக் 45. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 8 பிளாட்டுகள் கூரியூர் பகுதியில் தலா 1100 சதுர அடியில் உள்ளது. இதனை வரன்முறைப்படுத்தி மனை அங்கீகாரம் பெற ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., சேவுகப்பெருமாளை 56, அணுகினார்.
இதற்கு பி.டி.ஓ., ரூ.60 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து முகமது ெஷரீப் ேஷக் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தந்தனர்.
நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற முகமது ெஷரிப் ேஷக், அங்கு இருந்த பி.டி.ஓ., சேவுகப்பெருமாளிடம் அந்த ரூ.60 ஆயிரத்தை கொடுத்தார். அவர் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பி.டி.ஓ.,வை கையும், களவுமாகப்பிடித்து கைது செய்தனர்.
பெரியப்பா எரித்துக்கொலை தம்பி மகன் போலீசில் சரண்
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பெரியப்பா ராதாவை 65, வெட்டி, தேங்காய் மட்டை குவியலில் போட்டு தீவைத்து எரித்து கொன்ற தம்பி மகன் கர்ணன் 27, போலீசில் சரணடைந்தார்.
வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராதா. விவசாயி.
![]() |
இவரது மனைவி கருப்பாயி 60. இத்தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ராதா நேற்று மதியம் 3:30 மணிக்கு கிருஷ்ணன் கோயில் ரோட்டில் உள்ள தோட்டத்தில் மாடு மேய்க்கும்போது, அங்கு வந்த அவரது தம்பி செல்வத்தின் மகன் கர்ணன், என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கர்ணன் தனது பெரியப்பா ராதாவை அரிவாளால் வெட்டி, அங்கிருந்த தேங்காய் மட்டை குவியலில் போட்டு தீவைத்து எரித்துள்ளார். பின்னர் வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
போலீசார் வந்து பார்த்தபோது, ராதா உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து கர்ணனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்