Last Updated:
ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், சிக்னல் அமைப்புகளைத் தானியக்கமாக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் கண்காணிப்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
நாளை தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இந்திய ரயில்வே துறைக்கான முக்கிய எதிர்பார்ப்புகள் மற்றும் சாத்தியமான அறிவிப்புகள் குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
2047-ம் ஆண்டிற்குள் “வளர்ந்த இந்தியா” என்ற இலக்கை எட்டும் வகையில், இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ. 2.65 லட்சம் கோடியாக இருந்த ரயில்வே நிதி ஒதுக்கீடு, இந்த முறை ரூ.2.8 லட்சம் கோடியாக (8% உயர்வு) அதிகரிக்க வாய்ப்புள்ளது. தண்டவாளங்களை நவீனப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ரயில் விபத்துகளைத் தவிர்க்கும் உள்நாட்டுத் தொழில்நுட்பமான ‘கவாச்’ அமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்த பெரும் நிதி ஒதுக்கப்படலாம். குறிப்பாக, மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் இந்த மோதல் எதிர்ப்பு அமைப்பை விரைவாக நிறுவ முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போது பகல் நேரங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, நீண்ட தூரப் பயணங்களுக்காக 20 புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம். இது சாமானிய மக்களின் பயணத்தை ஆடம்பரமாகவும் வேகமாகவும் மாற்றும்.
2020-ல் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை (40-50%) மீண்டும் வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் இது குறித்த சாதகமான அறிவிப்பு வெளியாகும் என லட்சக்கணக்கான முதியவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ‘ஹைட்ரஜன் ரயில்களை’ வணிக ரீதியாக இயக்குவதற்கான நிதியுதவி மற்றும் கொள்கை அறிவிப்புகள் வெளியாகலாம். ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், சிக்னல் அமைப்புகளைத் தானியக்கமாக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் கண்காணிப்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
மூத்த குடிமக்கள், ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… பட்ஜெட்டில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…


