மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட தலைவர்கள் சொல்லியுள்ள கருத்துகளை பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கான பயணத்தில் இந்த பட்ஜெட் வலுசேர்க்கும். தொலைநோக்குடன் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வளர்ச்சி விகிதத்தை அதே வேகத்தில் தொடர திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சாதாரண மனிதர்களை எட்ட பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
திமுக எம்.பி. கனிமொழி, “விவசாயிகளை பற்றி பேசவே பேசாத பட்ஜெட்டாக இது உள்ளது. பட்ஜெட்டில் மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டாவது ஏதாவது அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், என்ன செய்தாலும், தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்பதால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டை கண்டுகொள்ளவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது. தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே.” எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “யானை பசிக்கு சோளப்பொறி தான் இந்த பட்ஜெட். தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல் நேரம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஓரளவிற்குத்தான் அறிவிப்புகள் வந்துள்ளன.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது; நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கப்படவில்லை; தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி வளர்ச்சி நிதியை வழங்க முன்வரவில்லை; நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

