பிகாரில் பாஜகவே, ராஷ்டிரிய ஜனதா தளமோ, யார் ஆட்சியில் இருந்தாலும் முதலமைச்சர் நிதிஷ் குமார் தான். அவர் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கடந்த 20 ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இதனால், அரசியல் வியூக வகுப்பாளர்கள் உட்பட பலர், பிகார் அரசியலில் அவர் ஒரு “உருளைக்கிழங்கு” போன்றவர் என கூறுகின்றனர். அதாவது, அவரைக் கட்சிகள் ஒதுக்கி வைத்தாலும், இறுதியில் அவரைச் சேர்க்காமல் ஆட்சி அமைப்பது கடினம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
பிகார் முதலமைச்சராக அவர் முதல் முதலில் அரியணை ஏறியது 2000 ஆவது ஆண்டில். ஆனால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறியதால் 7 நாட்களில் பதவி விலகினார். அவரது அரசியல் பலம் என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி. 7% குர்மி-கோரி சமூகங்கள், 26% MBCs எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என 33 சதவிகித வாக்குகள் என்றுமே நிதிஷ்குமாருக்கு தான். இது தவிர, மகாதலித்துக்கள் மற்றும் பெண்களின் வாக்குகளையும் தேர்தல் தவறாமல் அறுவடை செய்துவிடுகிறார் நிதிஷ்.
நிதிஷ் குமாரின் நிர்வாக முறை என்பது, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலன்களை மையமாகக் கொண்டது. ஜீவிகா தீதி, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி ஆகிய அவரது முதன்மைத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இது மட்டுமல்லாமல், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி பெண் வாக்காளர்களின் ஆதரவுத் தளத்தை உறுதி செய்துகொண்டார். பஞ்சாயத்துகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவிகித ஒதுக்கீட்டையும், பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீட்டையும் வழங்கி அவர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டார் நிதிஷ் குமார்.
மூத்த குடிமக்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியது, அங்கன்வாடி மற்றும் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தியது நிதிஷின் கடைசி நிமிட ஸ்டண்ட். இருப்பினும், நிதிஷ் குமாரின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருவதை தான் மதிப்பீட்டு எண்கள் காட்டுகின்றன. விருப்பமான முதலமைச்சராக நிதிஷின் ஒப்புதல் மதிப்பீடுகள் 2020-இல் 37 சதவிகிதமாக இருந்தது. இது அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 விழுக்காடாக சரிந்து விட்டது. நிதிஷ்குமாரைப் போலவே, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் சரிவு தான். 2010-இல் 115 இடங்களைப் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் கடந்த தேர்தலில் வெறும் 43 தொகுதிகளை மட்டுமே பிடித்தது.
பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டதும், அதனை எதிர்த்து 17 ஆண்டுகளாக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இது நடந்தது 2013 ஆம் ஆண்டு. பின்னர், 2015-ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியை அமைத்து வெற்றி பெற்றார். 2017 ஆம் ஆண்டு, துணை முதலமைச்சராக இருந்த தேஜஸ்வி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதற்காக தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.. தேஜஸ்வி மறுக்கவே, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
பதவி விலகிய அடுத்த நாளே, பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்து புதிய அரசாங்கத்தை அமைத்தார். 2022 இல் பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு மகாகத்பந்தன் கூட்டணியில் ஐக்கியமாகி முதலமைச்சர் அரியணையில் ஏறினார். 2024-ஆம் ஆண்டு ஜனவரியில், மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். ஒவ்வொரு முறையும் அவர் கூட்டணியை மாற்றும்போது, அவர் முதலமைச்சர் பதவியிலேயே தொடர்வார்.
இதனால், தனது அரசியல் லாபத்திற்காக அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் தலைவர் என்ற இமேஜை பெற்றுள்ளார். RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் நிதிஷ் குமாரை “பல்டு மாமா” என்றும் கிண்டல் செய்வதுண்டு. 1977, 1980, 1985, 1995 ஆகிய 4 தேர்தல்களில் பிகார் சட்டப்பேரவைக்கு போட்டியிட்ட நிதிஷ் குமார், 1985ல் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகளாக முதலமைச்சராகவே தொடர்கிறார். இந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை கூட சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
சட்டமேலவை உறுப்பினராக மட்டுமே இருந்துக் கொண்டு முதலமைச்சர் பதவியில் தொடர்கிறார். அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஒருமுறைகூட தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை. தற்போதைய தேர்தலிலும் பாஜக வெளிப்படையாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலும், கூட்டணி வெற்றி பெற்றால், அதிக இடங்களைக் கைப்பற்றி அவருக்குச் சமமான ஒருவரைக் கொண்டு வரத் திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
November 13, 2025 12:34 PM IST
ஒருமுறை கூட போட்டியிடவில்லை.. 20 ஆண்டுகள் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் கோலோச்சியது எப்படி?

