Last Updated:
பிகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளர், முகேஷ் சஹானி வி.ஐ.பி. கட்சிக்கு துணை முதல்வர்; காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதவி அறிவிப்பு இல்லை.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், 14 தொகுதிகளில் போட்டியிடும் விகாஷீல் இன்சான் கட்சித் (வி.ஐ.பி.) தலைவர் முகேஷ் சஹானி துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு, கிங்மேக்கர் என்ற நிலையை விஐபி கட்சி தலைவர் முகேஷ் சஹானி அடையாவிட்டாலும் அவரது கட்சி எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணிக்கு பிகாரின் முக்கிய சமூகமான நிஷாதா சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
2020 பிகார் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களை பிடித்தது. இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 15 இடங்கள் மட்டுமே. இதில் ஏறக்குறைய 20 தொகுதிகளில் விகாஷீல் இன்சான் கட்சி, மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கணக்கில் தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி அறிவிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதேசமயம், 61 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணியின் இரண்டாம் பெரிய கட்சியான காங்கிரஸுக்கும், 20 தொகுதிகளில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எந்தப் பதவியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பொதுவாக பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும்போது அந்தக் கூட்டணி வென்றதும், முக்கிய கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து அவர்களை அங்கீகரிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல், ஒரே கட்சி பெரும்பான்மையை பெற்றாலும், அதில் இருக்கும் முக்கிய தலைவர்களை சமாதானம் செய்யவும் அங்கீகரிக்கவும் துணை முதலமைச்சர் பதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த முதல்வர் முகம் இவர் தான் என்பதை சூசகமாக சொல்லும் கோணத்திலும் துணை முதலமைச்சர் வேட்பாளர் நியமனங்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்ட பின் அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “முகேஷ் சஹானி மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைத் தவிர, மற்ற துணை முதலமைச்சர்களும் இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
கூட்டணி தொகுதி பங்கீட்டிலேயே முடிவு எட்டப்படாமல் இந்தியா கூட்டணி கட்சிகள் தாங்களாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது அனைத்து கட்சிகளையும் சமாதானம் செய்து அங்கீகரிக்க துணை முதலமைச்சர் எனும் பதவி கொடுக்கப்படலாம் எனவும் அது காங்கிரஸுக்கும் கிடைக்கும் எனவும், அதன் காரணமாகவே மற்ற துணை முதல்வர்களும் என தேஜஸ்வி சொன்னதன் பின்னணி எனவும் சொல்லப்படுகிறது.
October 23, 2025 5:10 PM IST


