Last Updated:
பீகார் துணை முதலமைச்சரும், தொகுதி வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹாவை கிராம மக்கள் ஒன்று கூடி செருப்பு, கற்கள், மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை வீசி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் தற்போதைய துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹாவின் கான்வாய் வாகனம் பயங்கரமாக தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில், லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள லக்கிசராய் தொகுதியில் பாஜக சார்பில் விஜய் குமார் சின்ஹா போட்டியிடுகிறார். முதற்கட்ட வாக்குப் பதிவில் இந்தத் தொகுதியும் இருக்கும் நிலையில், அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
தொடர்ந்து அந்தத் தொகுதியில் இருக்கும் மற்ற வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப் பதிவை பார்வையிட்டுவந்தார். அப்படி லக்கிசராய் தொகுதியில் உள்ள கோரியாரி கிராமத்திற்குச் சென்றுள்ளார். விஜய் குமார் சின்ஹா, கோரியாரி கிராமத்திற்குள் சென்றபோது அங்கு திரண்ட அக்கிராமத்தினர் அவரது கான்வாய் வாகனத்தின் மீது செருப்பு, கற்கள், மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தினர்.
உடனே அவருடன் வந்த பாதுகாப்புப் படையினரும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினரும் அவரை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். அந்தக் கிராமத்தில் சற்று தள்ளி வந்த விஜய் குமார் சின்ஹா, உடனடியாக அம்மாவட்ட எஸ்.பிக்கு போன் செய்தார்.
போனில் பேசிய விஜய் குமார் சின்ஹா, “நான் இங்கு கிராமத்தில் இருக்கிறேன். மக்கள் கூட்டம் என்னை நோக்கி நெருங்கி வருகிறது. உடனே சிறப்புப் படையை அனுப்புங்கள். நான் இங்கு போராட்டத்தில் ஈடுபடப்போகிறேன். எஸ்பி மிகவும் பலவீனமானவர், கோழை. கற்களையும் மாட்டுச் சாணத்தையும் வீசியுள்ளனர். துணை முதல்வரை உள்ளே விடவில்லை” எனத் தெரிவித்தார்.
#WATCH | Deputy CM Vijay Kumar Sinha speaks to SP on phone, says, “I am here at the village. The crowd is coming closer. Send Special Force here. I will sit here in protest. The SP is so weak and a coward. They are not letting the Deputy CM go in. They have hurled stones and cow… https://t.co/cjcLbn87bv pic.twitter.com/wXB2EczAFN
— ANI (@ANI) November 6, 2025
தொடர்ந்து பேசிய அவர், “இவர்கள் ஆர்ஜேடி குண்டர்கள். ஆட்சியிலேயே இல்லாதபோதும், இவர்களின் அட்டூழியத்தைப் பாருங்கள். என் வாக்குச்சாவடி முகவரை மிரட்டி காலை 6.30 மணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். வாக்காளர்களை வெளியே வர விடுவதில்லை” என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். வாக்குப் பதிவு தினத்தில் துணை முதலமைச்சரும், தொகுதி வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹாவை கிராம மக்கள் ஒன்று கூடி செருப்பு, கற்கள், மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை வீசி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
November 06, 2025 3:17 PM IST


