243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் காவல்துறை, நிர்வாகம், கண்காணிப்பு பிரிவுகள் உள்ளிட்ட அமலாக்க ஏஜென்சிக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நேர்மையான மற்றும் எந்தவிதத் தூண்டுதலுமின்றி தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய, தேர்தல் ஆணையம் கடுமையான கண்காணிப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பணம், இலவசப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாட்டால் வாக்காளர்களைத் தவறாகப் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த உத்தரவின் முக்கிய இலக்காகும்.
அனைத்து அமலாக்க முகமைகளும் இவற்றின் பயன்பாட்டைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை நுணுக்கமாகக் கண்காணிக்க, அனைத்துத் தொகுதிகளிலும் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
October 15, 2025 4:53 PM IST

