Last Updated:
பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டி என அறிவித்திருந்த நிலையில், இறுதி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்டை அந்தக் கட்சி கொடுத்துள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதில், முதல் கட்டமான வரும் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி முறையாக தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது. இதற்கிடையில், இன்றுடன் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்தது.
இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிகாரின் அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியால் தனியே போட்டி என அறிவித்தது. இந்நிலையில், இன்று அந்தக் கட்சி பிகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், பிகார் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு காங்கிரஸ் – ஆர்.ஜெ.டி கூட்டணியே காரணம் என்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்திருப்பதாக தகவல்களும் வெளியாகியுள்ளன.
October 20, 2025 6:30 PM IST