Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி, பிகார் தேர்தல் பிரச்சாரத்தில் RJD, காங்கிரஸ் குடும்பங்களை ஊழல்வாதிகள் என விமர்சித்து, காங்கிரஸ் அதன் தலைவர் சீதாராம் கேசரியை அவமதித்தது என பேசினார்.
பிகார் மாநிலத்திற்கு வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் எல்லாம் நிறைவடைந்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிகாரின் பெகுசராய் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெகுசராய் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 20 ஆண்டுகளாக ஆர்.ஜெ.டி. தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அது ஆணவத்தில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஆணவம்தான், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றியது. காங்கிரஸ் முப்பத்தைந்து ஆண்டுகளாக பீகாரில் ஆர்.ஜெ.டி.யின் ஆதரவாளர்களாக இருந்து வருகிறது.
பிகாரில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம் ஆர்.ஜெ.டி. குடும்பம். அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்று வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மறுபுறம், நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் குடும்பம். இந்தக் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஜாமீனில் உள்ளனர். எனவே பிகார் மக்கள் இத்தகையவர்களை நம்பப்போவதில்லை.
‘காட்டு ராஜ்ஜியத்தின்’ தலைவர்கள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் எதிர்காலத்தை மட்டுமே உருவாக்கினர். பிகார் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டார்கள்.
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை உறுதியளித்து ஏழைகளை தங்கள் நிலத்தில் கையெழுத்திடச் செய்பவர்கள் ஒருபோதும் இளைஞர்களுக்கு வேலை வழங்க மாட்டார்கள்” என பேசினார்.
தொடர்ந்து பிகார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவரை காங்கிரஸ் அவமதித்ததை நாடு மறக்காது எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது; “இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் நினைவு நாள். இந்த காங்கிரஸ் குடும்பம் அவரை எப்படி அவமதித்தது என்பதை நாடு ஒருபோதும் மறக்காது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சீதாராம் கேசரி நமது பிகாரின் பெருமை. இந்தக் குடும்பம் சீதாராம் கேசரியை அவரது வீட்டின் குளியலறையில் பூட்டி வைத்தது. அதுமட்டுமின்றி, அவரை தூக்கி வீதியில் வீசியது. காங்கிரஸ் தலைவர் பதவியை அவரிடமிருந்து பறித்தனர்” என பேசினார்.
October 24, 2025 3:09 PM IST


