Last Updated:
பிகார் பெகுசராய் பகுதியில் ராகுல் காந்தி மீனவர்களுடன் குளத்தில் நீந்தி, மீன் பிடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக பிகார் மாநிலத்தில் வரும் 6ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவு தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், பிகார் மாநிலம், பெகுசராய் தொகுதியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் பேசிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடந்துக்கொண்டிருந்தபோது டொனால்ட் டிரம்பிடம் இருந்து போன் வந்தது. சண்டையை நிறுத்தச் சொல்லி அவர் கேட்ட இரண்டாவது நாளில் தாக்குதல் நிறுத்தப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 56 இன்ச் மார்பு இருக்கிறது. ஆனால், மார்பின் அளவைக் கொண்டு நாம் தைரியத்தை கணக்கிட முடியாது. மகாத்மா காந்திக்கு ஒன்றும் பெரிய மார்பு கிடையாது. ஆனால், அவர் அச்சமின்றி பிரிட்டிஷாரை எதிர்த்து போராடினார்.
1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, அமெரிக்க கடற்படை கொண்டு அந்நாட்டு அதிபர் நம்மை அச்சுறுத்த முயன்றார். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவால் என்ன செய்யமுடியுமோ செய்யட்டும், இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்வோம் என கூறி போரை தொடர்ந்து வெற்றி கண்டார்” என பேசினார்.
बेगूसराय, बिहार में आज VIP पार्टी के अध्यक्ष मुकेश सहनी जी के साथ वहां के मछुआरा समुदाय से मिलकर बहुत अच्छा लगा।
काम उनका जितना दिलचस्प है, उससे जुड़ी उनकी समस्याएं और संघर्ष उतने ही गंभीर हैं। मगर, हर परिस्थिति में उनकी मेहनत, जज़्बा और व्यवसाय की गहरी समझ प्रेरणादायक है।… pic.twitter.com/8EecHux9m7
— Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2025
தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து கிளம்பிய ராகுல் காந்தி, பெகுசராய் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது அங்கிருந்த குளத்தில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். உடனே அங்குச் சென்ற ராகுல் காந்தி, அந்த மீனவர்களின் படகில் சற்று தூரம் பயணித்தார்.
பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென படகில் இருந்து குளத்தில் குதித்த ராகுல் காந்தி அந்தக் குளத்தில் சற்று தூரம் வரை நீந்திச் சென்று திரும்பினார். மேலும், அங்கிருந்த மீனவர்களுடன் சேர்ந்து கலந்துரையாடிய அவர், அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டார். மேலும், அவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார். இது தொடர்பான படங்களும், வீடியோக்களும் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
November 02, 2025 4:57 PM IST
Bihar Election | திடீரென குளத்தில் குதித்த ராகுல் காந்தி! மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த வீடியோ வைரல்


