Last Updated:
பீகார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில், என்.டி.ஏ. கூட்டணி 205 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில், 105 தொகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணியும், 14 தொகுதிகளில் மகாகத்பந்தன் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக சராசரியாக தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் முறையே 91 மற்றும் 83 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்.ஜே.டி. 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீகார் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ள சூழலில் காங்கிரஸ் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிலை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரளா திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், “காரணங்களை ஆய்வு செய்து செயல்பாடுகளை காங்கிரஸ் ஆய்வு செய்ய வேண்டும். கூட்டணியில் முதன்மை கட்சியாக இருப்பது ஆர்.ஜே.டி. எனவே அந்தக் கட்சியும் தனது செயல்பாடுகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியதாவது; “காரணங்களை விரிவாக ஆய்வு செய்வதில் கட்சிக்கு முழு பொறுப்பு உள்ளது. அதேசமயம், கூட்டணியில் நாங்கள் முதன்மையான கட்சி கிடையாது. எனவே ஆர்.ஜே.டி.யும் தனது செயல்பாடுகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.
பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை கட்சியில் இருந்து அழைக்கவில்லை. நான் அங்குச் செல்லவும் இல்லை. எனவே, தனிப்பட்ட முறையில் என்னால் பெரிய அளவில் கருத்து சொல்ல முடியாது. அங்கு களத்தில் இருந்தவர்கள் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
அமைப்பின் பலம் மற்றும் பலவீனம் குறித்தான கேள்விகள் உள்ளன. அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக சில சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது உண்மைதான்.
அதனை நாம் ஏற்கிறோமோ இல்லையோ, ஆனால் அது நமது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டவையே. அதேசமயம், இது முதல் முறை அல்ல, இதுபோன்ற சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பலன் அடையக்கூடிய விஷயங்கள் சில மாநில அரசுகள் ஏற்கனவே வழங்கியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்படியாக இருந்தாலும், அவர்கள் அதிக வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கின்றனர். இருந்தாலும், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
November 14, 2025 5:05 PM IST
Bihar Election | “கூட்டணியில் காங்கிரஸ் முதன்மை கிடையாது.. ஆர்.ஜே.டி. கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்” – எம்.பி. சசி தரூர்


