Last Updated:
Bihar Election இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளில் 68.52% வாக்குகள் பதிவாகின.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் மூன்று கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக செயின்பூர், கோவிந்த்பூர், ராஜௌலி, ஜமுய், சிகந்திரா, சக்காய் மற்றும் ஜஜா ஆகிய ஏழு தொகுதிகளில் மாலை ஐந்து மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில், 122 தொகுதிகளில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 68.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் பிகாரின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
November 11, 2025 8:49 PM IST


