பிகாரில் முதல் கட்டத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அலை வீசுகிறதா அல்லது நிதிஷ்குமார் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
பிகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்களில் 64 புள்ளி 66 விழுக்காடு பேர் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். இது பிகார் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியதும் இதுவே முதல் முறை.
கடந்த 2000 ஆவது ஆண்டில் பதிவான 62.57 விழுக்காடு வாக்குகள்தான் பிகார் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வாக்குகளாக இருந்தது. 3 கட்டமாக நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய இருகட்டத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 7.79 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதிக வாக்கு சதவீதம், ஜனநாயகத்தின் வெற்றி எனவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு கிடைத்த வெற்றி எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்கு என்றே பார்க்கப்படும். அதன்படி, முதல் கட்டத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை வைத்து இவை ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு வாக்குகள் என்று மகாகத்பந்தன் கூட்டணி விமர்சித்துள்ளது. ஆனால், இது மகாகத்பந்தன் கூட்டணிக்கான எலெக்ட்ரிக் ஷாக் என்று பிரதமர் மோடியும், மாற்றத்துக்கான வாக்குகள் என்று பிரசாந்த் கிஷோரும் ஆரூடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் காரணமாக வாக்கு சதவிகிதம் குறையும் என்று எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்த்துப் போயுள்ளன. புதிய வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டாலும் கூட, இறப்பு, வசிப்பிட மாற்றம் எனப் பல காரணங்களுக்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி பார்த்தால் தகுதியுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்ததால், வாக்குப்பதிவு சதவீத எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிக வாக்குப்பதிவு என்பது ஆட்சி மாற்றத்துக்குத்தான் வழிவகுக்கும் என சொல்லிவிட முடியாது என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், அதிகமான வாக்கு சதவீதம் சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும், சில நேரங்களில் எதிராகவும் இருந்துள்ளது. கடந்த 2017இல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 61.2% வாக்குகள் பதிவாகியிருந்தன. இது அதற்கு முந்தைய தேர்தலைவிட 1.84% அதிகம். ஆனால் சமாஜ்வாதி ஆட்சியை இழந்து, பாஜக ஆட்சிக்கு வந்தது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 8 முறை அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் 1962இல் மட்டுமே ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. அதேபோல் வாக்கு சதவீதம் குறைந்தபோது ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்த நிகழ்வுகளும் உண்டு. எனவே, வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பதை நேரடியாக ஆட்சி மாற்றத்துடன் தொடர்புபடுத்த இயலாது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், இரண்டாம் கட்டத் தேர்தலில், வாக்காளர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு வரவழைக்க இந்த வாக்கு சதவீதம் உத்வேகம் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 09, 2025 12:46 PM IST

