பெங்களூரு :கர்நாடகாவின் பெங்களூரில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், வாகனங்களை சுத்தம் செய்வது போன்றவற்றுக்காக குடிநீரை வீணாக்கினால் 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கடும் அவதி
மழை பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகளின் வறட்சி, நிலத்தடி நீர் குறைதல் உள்ளிட்ட காரணங்களால் போதுமான தண்ணீர் இல்லாததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லுாரிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மக்களின் திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது.
பெங்களூரின் குடிநீர் வினியோகத்திற்கு பொறுப்பான பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், காவிரி ஆற்றில் இருந்து நாள்தோறும், 15 லட்சம் லிட்டர் தண்ணீரை பெறும் வேளையில், தற்போது 28,000 லிட்டர் தண்ணீர் தேவை ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழலில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் பொதுமக்களை வலியுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது:
நகரம் முழுதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
நகரவாசிகள் வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
வசூலிக்க முடிவு
திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் குடிநீரைத் தவிர பிற செயல்களுக்கு தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மீறுபவர்களிடம் 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
மீண்டும் இதே செயலை செய்தால், ஒவ்வொரு முறைக்கும் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்