Last Updated:
ஏர் கன்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின் மற்றும் கீசர்கள் போன்ற பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்டார் ரேட்டிங் என்பது அந்த தயாரிப்பு எவ்வளவு ஆற்றல் திறன் (energy-efficient) கொண்டது என்பதை குறிக்கிறது.
நாட்டில் பண்டிகை சீசன் விற்பனை களைகட்டியுள்ள நிலையில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என பல மின்னணு சாதனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இவற்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் விலைமீது மட்டுமல்ல, குறிப்பிட்ட பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் மீதும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஏர் கன்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின் மற்றும் கீசர்கள் போன்ற பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்டார் ரேட்டிங் என்பது அந்த தயாரிப்பு எவ்வளவு ஆற்றல் திறன் (energy-efficient) கொண்டது என்பதை குறிக்கிறது. மேலும், இந்த மதிப்பீட்டை இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான எரிசக்தி திறன் பணியகம் (BEE – Bureau of Energy Efficiency) வழங்குகிறது. BEE வழங்கும் ரேட்டிங்கானது “ஒரு சாதனம் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கிறது மற்றும் அது எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பது குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க குறிப்பிடப்படுகிறது” என்று அதிகாரிகள் விளக்குகின்றனர்.
பொதுவாக ஸ்டார் ரேட்டிங் என்பது 1 முதல் 5 வரை வழங்கப்படுகிறது. இதில் 1 ஸ்டார் என்பது குறிப்பிட்ட பொருளின் ஆற்றல் செயல்திறன் குறைவாக இருக்கும் என்பதை குறிக்கிறது. அதேநேரம் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்களின் செயல்திறன் மிகவும் அதிகமாக இருக்கும். எளிமையாக சொல்வதென்றால் “1 ஸ்டார்: குறைந்த ஆற்றல் திறனைக் கொண்டிருக்கும் மற்றும் இயங்குவதற்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும். ஆனால், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்கள் அதிக ஆற்றல் திறனைக் கொண்டிருக்கும் மற்றும் இயங்குவதற்கு குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும்”.
அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவதால், வாடிக்கையாளர்களின் கரண்ட் பில்லில் குறிப்பிடத்தக்க சேமிப்பை அளிக்கின்றன. ஸ்டார் ரேட்டிங் குறித்த BEEயின் உதாரணம் ஒன்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் ஒரு 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட குளிர்சாதனப் பெட்டியை வாங்கி பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஆண்டுக்கு சுமார் 199 யூனிட் மின்சாரம் மட்டுமே அது பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் 1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட மாடல் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 487 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.
மேற்கண்ட உதாரணத்தின்படி பார்த்தால் அதிக ஸ்டார் ரேட்டிங் பெற்ற தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். இதில் சாதனம் இயங்குவதற்கு குறைவான ஆற்றலை பயன்படுத்துவது, குறைந்த மின்சாரக் கட்டணங்கள் மற்றும் குறைந்த கார்பன் ஃபுட்-பிரின்ட் ஆகியவை அடங்கும். 5- ஸ்டார் ரேட்டிங் பெற்ற தயாரிப்புகள், விலை சற்று அதிகம் கொண்டவை என்றாலும், பல ஆண்டுகள் மின்சார கட்டணத்தில் சேமிப்பை வழங்கும் நன்மையை அளிக்கின்றன, “இந்த நீண்ட கால நன்மை” நீங்கள் கூடுதலாக செலவழிப்பதைவிட அதிகம் திருப்பி தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், வாட்டர் ஹீட்டர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் போன்ற ஸ்டார் ரேட்டிங் கவராகும் பொருட்களின் மேல் அதிகாரப்பூர்வ BEE லோகோ மற்றும் ஸ்டார் ரேட்டிங் ஸ்டிக்கர் இருக்கிறதா என்பதை எப்போதும் வாடிக்கையாளர்கள் சரிபார்க்க அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இந்த ஸ்டிக்கர் குறிப்பிட்ட தயாரிப்பின் மாடல் நம்பர், ரேட்டிங் வழங்கப்பட்ட ஆண்டு மற்றும் மதிப்பிடப்பட்ட வருடாந்திர மின்சார நுகர்வு போன்ற விவரங்களை வழங்குகிறது. ரேட்டிங்ஸ் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுவதால், வாங்குவதற்கு முன்பு சமீபத்திய சான்றிதழை சரிபார்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அனைத்து தயாரிப்புக்கும் ஸ்டார் ரேட்டிங் இல்லை, குறிப்பிடத்தக்க ஆற்றல் பயன்பாடு கொண்ட சாதனங்கள் மட்டுமே இந்த அமைப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக தவறான ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தலாம். எனவே, நுகர்வோர் நம்பகத்தன்மையை கவனமாக சரிபார்க்க வேண்டும். ஸ்டார் ரேட்டிங் பார்த்து தயாரிப்புகளை தேர்வு செய்வது என்பது ஆற்றல் செயல்திறனை அளவிடுவது மட்டுமல்ல; அவை ஒரு புத்திசாலித்தனமான முடிவைக் குறிக்கின்றன. BEE அதிகாரிகள் வலியுறுத்துவதுபோல, இந்த ரேட்டிங்ஸ் உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கின்றன.
October 20, 2025 6:57 PM IST


