Bangladesh: அடுத்தடுத்து தொழிற்சாலைகள் மூடல், மின்சாரம் கட், மக்கள் போராட்டம்.. வெடிக்கும் புது பிரச்சனை!
சிலந்தி வலையில் சிக்கியது போல் பங்களாதேஷ் அரசு எடுத்த ஒரு முடிவு தற்போது அந்நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தியை கடுமையாக பாதித்து டெக்ஸ்டைல் தொழிற்சாலை முதல் விவசாய உர உற்பத்தி வரையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்து மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பங்களாகதேஷ் அரசு பழைய எரிவாயு வயல்கள் மற்றும் புதிய ஆதாரங்களை தேடுவதில் முதலீடு செய்யாமல் இருந்த காரணத்தால் 2024 – 2025ஆம் ஆண்டுகளில் அதிகப்படியான எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள துவங்கியது.

இதன் விளைவாக அந்நாட்டின் 6வது பெரிய விவசாய உர உற்பத்தி ஆலையான Ashuganj ஆலை மூடப்பட்டு, கிட்டத்தட்ட ஒருவருடமாக எவ்விதமான செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு வெறும் கட்டிடமாக நின்று வருகிறது. இத்தொழிற்சாலை ஒரு காலத்தில் 24 மணிநேரமும் இயற்கை எரிவாயு பயன்படுத்தி யூரியா உரம் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த தொழிற்சாலையை நம்பி தான் பங்களாதேஷ் நாட்டின் விவசாயிகள் இயங்கி வந்தனர், தற்போது யூரியாவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும் வரும் காரணத்தால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
Ashuganj தொழிற்சாலையில் ஒரு நாளுக்கு 1000 கிலோ யூரியா உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது. மார்ச் 2025ல் மூடப்பட்ட Ashuganj விவசாய உர உற்பத்தி ஆலை தற்போது மத்திய கிழக்கு போரின் காரணமாக கூடுதலாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஒருப்பக்கம் விவசாய உர தட்டுப்பாடு, மறுப்புறம் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உலகின் 2வது பெரிய டெக்ஸ்டைல் ஏற்றுமதி நாடான பங்களாதேஷில் 100க்கும் அதிகமான டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் மற்றும் சாய பட்டறைகள் மூடப்பட்டோ அல்லது உற்பத்தியை குறைத்துள்ளது.
இதோடு அந்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார உற்பத்தி ஆலைகளுக்கும் இயற்கை எரிவாயு முக்கிய ஆதாரமாக இருக்கும் காரணத்தால் மின்சார பாதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது. சிஎன்ஜி வாகனங்களின் இயங்கமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடு இரண்டும் பங்களாதேஷ் நாட்டின் தொழிற்துறையை பெரிய அளவில் பாதித்துள்ளது. அந்நாட்டில் மற்ரற இடத்தில் எரிவாயு தளங்கள் இருந்தாலும் அதில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்ய காலம் அதிகம் தேவை, இதேபோல் இதற்கு அதிக முதலீடும் அவசியம் என்பதால் புதிய எரிவாயு வயலில் கைவைப்பது தற்போதைய நிலையில் ஏற்றதாக இருக்காது என்பதால் இதற்கான நடவடிக்கை எடுக்க முடியாமல் நிற்கிறது அண்டை நாடான பங்களாதேஷ் அரசு.

