அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின்மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில், பாலம் சீட்டுக்கட்டுப்போல சிதைந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது. டாலி என அழைக்கப்படும் அந்தச் சரக்கு கப்பலில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என சரக்கு கப்பலை நிர்வகிக்கும் சினெர்ஜி மரைன்டைம் குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளைப் பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `கப்பலில் இருந்த பணியாளர்கள் தங்கள் கப்பல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மேரிலாண்ட் போக்குவரத்துத்துறையை எச்சரித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் பாலத்தின்மீதான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, பாலத்தை மூடுவதற்கு முயன்றனர். அதனால் உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நடந்த அனைத்தும் இது ஒரு பயங்கரமான விபத்து என்பதைக் குறிக்கிறது.
இது வேண்டுமென்றே நடந்ததல்ல. இதைவிட நம்புவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8,50,000 வாகனங்கள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றன. எனவே கூடிய விரைவில் அதைச் சீரமைத்து, போக்குவரத்தை உறுதிசெய்வோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.