Last Updated:
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 11:45 மணிக்கு தொடங்குகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சைஃபர்ட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். விக்கெட் கீப்பர் சைஃபர்ட் 4 ரன்களும், டெவோன் கான்வே 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
சேப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் 1.4 ஓவர்களில் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் இணைந்த டேரில் மிட்செல் மற்றும் டிம் ராபின்சன் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மிட்செல் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜேக்கப் 20 ரன்கள் சேர்த்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும், டிம் ராபின்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 66 பந்துகளை எதிர்கொண்ட டிம் ராபின்சன் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 181 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களம் கண்டது. தொடக்க வீரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
18 பந்துகளை எதிர்கொண்ட ஹெட் 31 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் 29 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த மார்ஷ் மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
October 01, 2025 6:01 PM IST


