
அசாமின் Umrangsu என்ற இடத்தில் உள்ள எலி துளை என்றழைக்கப்படும் சுரங்கம், சுமார் 340 அடி ஆழம் கொண்ட இயற்கையான கிணறு போன்றது. இதில் கயிறு, ஏணி உள்ளிட்டவற்றின் உதவியுடன் கிடைமட்டமாக இறங்கி பாறைகளுக்கு நடுவே சுரங்கம் தோண்டி நிலக்கரி எடுப்பது வழக்கம். மிக ஆபத்தான இந்த சுரங்கம் 12 ஆண்டுகளுக்கு முன்பே அரசால் கைவிடப்பட்டுவிட்டது.
ஆனால், கடந்த திங்கட்கிழமை சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்க தொழிலாளர்கள் சென்ற நிலையில், சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. சுமார் 50 முதல் 60 அடி உயரத்துக்கு நீர் மட்டம் உயர்ந்த நிலையில், பலரும் கயிறு உதவியுடன் வெளியேறிய நிலையில் 9 பேர் மட்டும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையும் படிக்க: 80 பள்ளி மாணவிகளை மேல்சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய தலைமை ஆசிரியர் – ராஞ்சியில் அதிர்ச்சி
அவர்களை மீட்க, தண்ணீரை வெளியேற்றி ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையினர் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். MI ஹெலிகாப்டர்கள், ONGC மற்றும் Coal India இயந்திரங்களும் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் சுரங்கத்துக்குள் புகுந்த தண்ணீர் நிலக்கரியுடன் கலந்து அமிலத்தன்மை பெற்று சேற்றுத் தன்மையுடன் உள்ளதால், மீட்புப் பணி தாமதமாகிறது எனக் கூறப்படுகிறது. இதனால், தண்ணீருக்குள் என்ன இருக்கிறது என்பதை சரியாக பார்க்க முடியவில்லை என்றும் ரிமோட் இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை என்றும் கடற்படையின் நீர் மூழ்கி வீரர்கள் கூறுகிறார்கள்.
மேலும், சுரங்கத்திற்குள் மேலும் 4 சிறிய சுரங்கங்கள் உள்ளதாகவும் அவை முடிவே இன்றி நீண்டுக்கொண்டே செல்வதாகவும் சொல்லப்படுகிறது.
சுரங்கத்தின் ப்ளூ பிரிண்ட் இல்லாத நிலையில், இந்த மீட்புப் பணி மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. மேலும் சில சுரங்கப் பாதைகளின் உயரம் வெறும் 3 அடிகளே உள்ளதால், நிற்கக் கூட முடியாமல் குனிந்தபடியே தேட வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் எலித்துளை சுரங்கங்கள் இதுபோல் சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
ஓராண்டுக்கு முன்பு நாகாலாந்தில் எலி துளை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2018 இல் மேகாலயாவில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேரின் நிலைமை இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில், Umrangsu விபத்து குறித்து சிறப்பு விசாரணை தேவை என்றும் பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கடிதம் எழுதி உள்ளார்.
January 12, 2025 1:25 PM IST
Assam Coal Mine Tragedy: 4 பேர் சடலமாக மீட்பு.. 5 பேர் நிலை என்ன? அசாம் எலிதுளை சுரங்கத்தில் மீட்பு பணி தாமதமாக காரணம் என்ன?

