Last Updated:
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பிலும் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடரின் இறுதி போட்டி நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துபாயில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் இறுதி கட்ட பயிற்சி மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நடந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தானை இந்திய அணி வென்றது. அதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்குவதை இந்திய அணி வீரர்கள் புறக்கணித்தனர். அதன் பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் வீரர்கள் பிரச்சினையை எழுப்பிய நிலையில் அந்த போட்டியின் நடுவர் மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தின் போதும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. அப்போதும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை குலுக்குவதை புறக்கணித்தனர்.
அடுத்த திருப்பமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்லும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்க உள்ளார். வழக்கமாக கோப்பையை வெல்லும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் தான் போட்டி நடத்தும் போதெல்லாம் வழங்கி வருகிறார். இந்த மொஹிசின் நக்வி பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நாளை இந்திய அணி கோப்பையை வெல்லும் போது மொஹ்சின் நக்வியின் கைகளால் இந்திய அணி வீரர்கள் கோப்பையை பெறுவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கை குலுக்குவதை தவிர்த்த இந்திய வீரர்கள் கோப்பையை பெற்றுக் கொள்வார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பிலும் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை
September 27, 2025 7:50 PM IST


