Last Updated:
Asia Cup | அடுத்த மாதம் 9ஆம் தேதி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்திய அணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தமிழக வீரர் சாய் சுதர்சன் உள்ளிட்டோர் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 9ஆம் தேதி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்திய அணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்து ஒரு மாதம் ஓய்வு கிடைக்கும் என்பதால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையையும் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்ய போவதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆசியக்கோப்பைக்கு 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய முடியும் என்பதால் மற்ற இளம் வீரர்களும் வாய்ப்பு பெறலாம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோர் வலுவான இடத்தை பிடித்துள்ள நிலையில் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்தியாவின் டாப் ஆர்டரை மேலும் வலுப்படுத்தும் வகையில் சாய் சுதர்சனை சோதனை ரீதியில் அணியில் எடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் மாதம் உள்ளூரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதால் முகமது சிராஜ் அல்லது பும்ரா இருவரில் யார் இந்திய அணியில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்கிடையே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 06, 2025 8:21 AM IST

