Last Updated:
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி, பாகிஸ்தானை விடவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
ஏற்கனவே லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ள நிலையில் ஞாயிறு அன்று இரு அணிகளுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2 போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற சூழலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியில் முகமது ஹாரிஸ் 31 ரன்களும், நவாஸ் 25 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி, பாகிஸ்தானை விடவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி ஞாயிறு அன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது
September 26, 2025 12:21 AM IST


