Last Updated:
ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 3 மில்லியன் டாலர் டிக்கெட் வருமானத்தை இழந்து அதிர்ச்சியில் உள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடனான வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, கிரிக்கெட் வாரியமோ சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி எப்படி அனல் பறக்குமோ அதற்கு சற்றும் சளைக்காத ஆக்ரோஷம், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் காணப்படும். இரு நாட்டு வீரர்களும் உலகக் கோப்பைக்கு நிகராகக் கருதி உயிரைக் கொடுத்து ஆடுவர்.
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கம் என்பதற்கேற்ப முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் ஆல் அவுட் ஆகின. மறுநாள், இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 164 ரன்களில் ஆல் அவுட் ஆகி, ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் முதல் இன்னிங்ஸைப் போலன்றி இம்முறை அதிரடி காட்டியது ஆஸ்திரேலியா. 83 பந்துகளில் 123 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட்டின் அதிரடியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டி தொடங்கியது 2வது நாளிலேயே அதாவது 3 நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வாகை சூடியது.
இதனால் 3 நாட்களுக்கான பார்வையாளர் டிக்கெட் கட்டணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளது. 3 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 17 கோடியே 35 லட்ச ரூபாயை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளது. வெளியே சொல்ல முடியாவிட்டாலும் நொந்துதான் போயிருக்கின்றனர் வாரிய அதிகாரிகள்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 23, 2025 6:03 PM IST


