Last Updated:
Artificial Flower Garland Making| செயற்கை பூ மாலை பிசினஸில் அசத்தி வரும் பெண்கள் பற்றிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்.
தொழில்துறையில் பெண்கள் அதிக அளவில் கால் பதித்து சாதித்து வருகின்றனர். அதாவது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் பல்வேறு சுய தொழில்கள் செய்து முன்னேற்றம் கண்டு வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே கைவினைப் பொருட்கள் முதல் உணவு வகைகள் என பல்வேறு பொருட்களை தயார் செய்து அதனை வெளி இடங்கள் வரை விற்பனை செய்தும் வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரமும், அவர்களுக்கென்று தனி அடையாளமும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ள பெண்களும் கூடை பின்னுதல், இயற்கை முறையில் குளியல் சோப், ஊறுகாய், செயற்கை அழகு பூங்கொத்து, கைவினைப் பொருட்கள், இயற்கை விவசாயம், உரங்கள் தயாரிப்பு போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் மேரி கோமதி என்ற பெண் மற்றும் அவருடன் சேர்ந்து தற்போது 53 பெண்கள் உட்பட செயற்கை பூ மாலை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய அவர், ”நாங்கள் இப்போது செயற்கை பூ மாலை தயார் செய்து வருகின்றோம். அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நல்லா டிரெண்டா போயிட்டு இருக்கு. தற்போது எல்லா பொருளும் ரெடிமேட் ஆக மாறி வரும் நிலையில் இந்த செயற்கை பூமாலைக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில் இது ஒருவர் ஆரம்பித்து பின் ஒரு குழுவாக இணைந்து இப்ப 53 பேர் இந்த தொழில் செய்து வருகின்றனர். இது போட்டி இல்லாத ஒரு தொழிலா இருக்கு. குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியே போய் வேலை செய்ய முடியாத பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்களால வெளியில போயிட்டு வேலை பார்க்கிறதுக்கு முடியாத ஒரு சூழ்நிலை அப்படி இருக்கையில் வீட்டில் இருந்தே தொழில் பண்றதுக்கு இது ஒரு வாய்ப்பா இருக்கு. அதனால அந்தப் பெண்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகிறது.
நாங்கள் இந்த செயற்கை பூ மாலைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் கொடுத்து வருகின்றோம். பொதுவாக ஒரு தொழில் எடுத்து நடத்தும் போது அதற்கு வருகின்ற முக்கிய சிக்கல் என்னன்னா மார்க்கெட்டிங் பண்றதுதான். ஆனா இந்த செயற்கை பூ மாலை பிசினஸ்ல அந்த பிரச்சனை எங்களுக்கு இல்லாம இருக்கு. அதாவது மார்க்கெட்டிங் எங்களால ஈசியா பண்ண முடியுது.
நாங்க ஒரு அடியிலிருந்து மூன்று அடி வரைக்கும் மாலை கொடுக்கிறோம். ஒன்றரை அடியிலிருந்து ஆறு அடி வரைக்கும் நிலை தோரணங்கள் கொடுக்கிறோம். குறைந்தது 100 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை செயற்கை பூ மாலை, பூந்தொட்டிகள் நாங்க தயாரிச்சிட்டு இருக்கோம்.
இதன் மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் 6000 முதல் 8000 வரை வருமானம் கிடைக்கிறது. மெட்டீரியல்களை பெங்களூரில் இருந்து நாங்கள் இறக்குமதி செய்து கொள்கின்றோம். அத்தோடு இங்கு இருந்து மெட்டீரியல் விற்பனையும் செஞ்சிட்டு இருக்கோம்.
தற்போது பெண்கள் அவர்களின் உடைகளுக்கு ஏற்ப வண்ண வண்ணமாக பூக்களை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அதற்கு இந்த செயற்கை பூ மாலை ஒரு முக்கிய இடத்தை தருகிறது. மேலும் பள்ளி ஆண்டு விழாக்கள், கடைகள் போன்றவற்றில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கின்றன.
புதுக்கோட்டை, திருச்சி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் செயற்கை பூ மாலைகளை விற்பனை செய்து வருகின்றோம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த தொழில் நிச்சயமாக கை கொடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 24, 2025 12:00 PM IST

