Tamilnadu
oi-Velmurugan P
தஞ்சாவூர்: தஞ்சை இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு விட்ட வார்த்தை தான் அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணம் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். பொதுவாக கண் முன்னே எங்கே பிரச்சனை நடந்தாலும், தனக்கு நடப்பது அநீதி என்று கருதினாலும், அதனை பொறுமையாக அணுகாமல் வார்த்தையைவிடுவது, கையை ஓங்குவது, ஒருமையில் பேசுவது என்ற கோபமான மனநிலையில் இருப்பவர்கள் பொதுவாக வாழ்க்கையில் சிக்கலையே சந்திக்கிறார்கள். அதனை தான் பாரி என்ற நெட்டிசன் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது பதிவினை அப்படியே பார்ப்போம்.
” இந்தப் பையன் காவலரை அறைந்த விவகாரத்தில் நடந்த நிகழ்வுகளை கவனித்தால்.. anger management ன் அவசியத்தை உணர்த்துகிறது. குறிப்பாக பொது இடங்களில் கோபத்தை அடக்கி ஆளுதல் மிக முக்கியமான ஒன்று.

இந்தப் பையன் இயல்பிலேயே கோவக்காரன் போல.. போராட்டக்காரர்கள் இந்தப் பையனின் அன்றாட வேலைக்கு இடையூறு செய்கிறார்கள்.. கும்பல் மனநிலையில் அவர்கள் இந்தப் பையனிடம் போராட்டம் நடக்கிறது என்று சொல்லி வழி விட மறுக்க, அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.. வாய்த்தகராறாக ஆரம்பித்த வாக்குவாதத்தில், போராட்டம் செய்த குழுவில் ஒருவர் ஒருமையில் திட்ட.. பதிலுக்கு இந்தப் பையனும் திட்ட.. அப்போதுதான் காவலர்கள் உள்ளே வருகிறார்கள்.. அவர்களிடம் அந்த நிகழ்வை இந்தப் பையன் ஆவேசமாக சொல்லிக் கொண்டிருக்க..
காவலர்களில் ஒருவர்.. அங்கிருக்கும் சூழல் கொடுத்த அழுத்தத்தில்.. இந்தப் பையனின் ஆவேசமான உடல்மொழியில் இரிட்டேட் ஆகி.. “ஓவரா பேசாம நிறுத்துடா..” என்பது போல சொல்லி, கண்டிப்பு தொனியில் முதலில் கையை ஓங்குகிறார்.. அது அடிக்கிற நோக்கத்திலான தொனி இல்லை.. பிரச்சனையில்லாமல் அவனை அங்கிருந்து அனுப்பிவிடும் நோக்கில்தான் அது இருந்தது. ஆனால் பதிலுக்கு இந்தப் பையன், “கைய ஓங்குற.. அடிச்சிருவியா.. அல்றா பார்ப்போம்” என்று சட்டென ஒருமையில் பேச, காவலரின் ஈகோ சீண்டப்பட அதன் பின்னரே காவலர் அடிக்கிறார்..
பதிலுக்கு இந்தப் பையன் ஓங்கி சப்பென அறைந்துவிட்டான்.. தன் பக்கம் தவறு இல்லை என்ற நிலையில் ஆரம்பமான நியாயமான கோபம்.. சில நொடிகளிலேயே அந்தப் பையனின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தைக் கொண்டு வரும் அளவிற்கு திசை திரும்பிவிட்டது. கோபத்தை அடக்கி ஆளுதல் எத்தனை அவசியம் என இந்த நிகழ்வு எனக்கெல்லாம் பெரிய பாடம்” இவ்வாறு பாரி என்ற நெட்டிசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவினை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
பொதுவாக நீங்கள் நியாயத்திற்காக கோபப்படும் சூழல் வரலாம். ஆனால் அங்கு நிதானத்தை இழக்கும் போதுஉங்கள் பக்கம் உள்ள நியாகமும் தர்மமும் தவறிவிடும். குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஆத்திரத்துடன் சாமானிய மக்கள் மோதினால், பாதிக்கப்படுபவர் அதிகாரத்தில் உள்ளவர் அல்ல.. மாறாக சாமானிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். உங்களுடைய ஒரு நொடி ஆத்திரம்.. உங்கள் நியாகத்தையே காலி செய்வதுடன், உங்களின் எதிர்காலத்தையே அழித்துவிடும்.
அப்படி என்றால் கோபப்படவே கூடாதா.. கண்டிப்பாக கோபப்படுவார்கள். கோபம் யாருக்குமே வராமல் இருக்காது. ஆனால் கோபத்தை வெளிப்படுத்தும் முறை தான் உங்களுக்கு நியாயம் கிடைக்குமா இல்லை என்பதை தீர்மானிக்கும். குறிப்பாக பொதுவெளியில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதே பலம். அதுதான் உங்கள் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பலமாக இருக்கும்.. மாறாக பொதுவெளியில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கத்தினால், அவ்வளவு தான் எல்லாம் முடிந்துவிடும். அதேநேரம் உங்கள் பொறுமை தான் உங்களின் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். நீங்கள் பொறுமையாக நடந்தால், உங்களுக்கு அநீதி இழைக்கப்படாது. மாறாக உங்களின் எதிரே கோபத்தில் நிதானத்தை இழப்பவர் தான் சிக்கலுக்கு உள்ளாவார். இதுதான் இயற்கை என்கிறார்கள் நெட்டிசன்கள்.





