Last Updated:
அமெரிக்காவின் பார்வையில் வெனிசுலா என்பது வெறும் ஒரு நாடு மட்டுமல்ல, அது உலகின் மிகப்பெரிய ‘எண்ணெய் சுரங்கம்’. வெனிசுலாவின் எண்ணெய் வளம் ஏன் அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்…
அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகள், வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் அமைந்திருந்தாலும், கரீபியன் கடல் வழியாக அவை மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா – வெனிசுலாவின் நிலப்பரப்புகள்:
அமெரிக்கா, வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதன் தெற்குப் பகுதியான புளோரிடா மாகாணம் வெனிசுலாவிற்கு மிக அருகிலுள்ள அமெரிக்க நிலப்பரப்பாகும். தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கு முனையில் அமைந்துள்ளது வெனிசுலா. புளோரிடாவின் மியாமி நகருக்கும், வெனிசுலா தலைநகர் கராகஸ் (Caracas) நகருக்கும் இடையிலான வான்வழித் தூரம் சுமார் 2,100 கிலோ மீட்டர் மட்டுமே. காரகாசிலிருந்து 3 மணி நேர விமான பயணத்தில் மியாமியை அடைந்துவிடலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் தொடர்புதான் தற்போதைய மோதல்களுக்கு மிக முக்கியமான காரணமாகும்.

வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளம்…
வெனிசுலாவிடம் சுமார் 304 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவை விட அதிகம். வெனிசுலாவின் கிழக்கு பகுதியில் ஓடும் ஒரினோகோ நதிக்கு கீழே சுமார் 55,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், அதாவது தமிழ்நாட்டின் பாதி அளவுக்கு உலகின் மிகப்பெரிய எண்ணெய் படிவம் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 270 பில்லியன் பேரல்கள் எடுக்கக்கூடிய கச்சா எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெய் உலகின் பிற பகுதிகளில் கிடைக்கும் எண்ணெயிலிருந்து மாறுபட்டது. இது தண்ணீரை விட கனமானது மற்றும் தேன் போல மிகவும் பிசுபிசுப்பாக (Viscous) இருக்கும். இதை நிலத்திலிருந்து வெளியே எடுப்பது மிகவும் கடினம். சாதாரண சுத்திகரிப்பு நிலையங்களில் இதைச் சுத்திகரிக்க முடியாது. இதற்கென அமெரிக்காவில் உள்ள விசேஷமான ரிஃபைனரிகள் (Refineries) தேவை. இதனால்தான் அமெரிக்காவின் உதவி இல்லாமல் வெனிசுலாவால் அதன் எண்ணெயை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை.

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகும் வெனிசுலா..
அமெரிக்காவிற்கு மிக அருகில் இவ்வளவு பெரிய எண்ணெய் வளம் இருப்பது, அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருக்காமல், பக்கத்திலேயே இருக்கும் வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டமாகும். அண்மையில், வெனிசுலாவிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்களை அமெரிக்கக் கடற்படை கைப்பற்றியது. இது குறித்துப் பேசிய டிரம்ப், “அந்த எண்ணெய் எங்களிடமிருந்து திருடப்பட்டது, எனவே அதைக் கைப்பற்றி நாங்களே வைத்துக் கொள்வோம்” என்று கூறினார்.
வெனிசுலாவில் இருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களை வெனிசுலா அரசு முன்பு தேசியமயமாக்கியது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இந்த எண்ணெயை அமெரிக்கா ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் மற்றொரு முக்கிய விஷயம், வெனிசுலா எண்ணெயை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கையாளுவதுதான். வெனிசுலாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் சீனா. அமெரிக்காவின் தடையை மீறி சீனா ரகசியமாகக் கப்பல்கள் மூலம் எண்ணெய் வாங்குகிறது.

வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளில் ரஷ்யாவின் ‘ரோஸ்நெஃப்ட்’ (Rosneft) நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் கொல்லைப்புறத்திலேயே தனது எதிரி நாடுகள் காலூன்றுவதை அமெரிக்கா பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. தற்போதைய கள நிலவரப்படி, வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு 30 லட்சம் பேரல்கள் உற்பத்தி செய்த நாடு, தற்போது 5 முதல் 8 லட்சம் பேரல்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
Jan 04, 2026 10:35 AM IST
கொல்லைப்புறத்தில் காலூன்றும் எதிரி நாடுகள்… அமெரிக்காவின் கண்களை உறுத்தும் வெனிசுலாவின் வளம்!


