1939-ஆம் ஆண்டு ஈரானின் வடகிழக்கில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றான ‘மஷாத்’ நகரில் மத குருவின் குடும்பத்தில் பிறந்த கமேனி, தனது குழந்தைப் பருவத்தை ‘ஏழ்மையானது ஆனால் இறைபக்தி மிக்கது’ என கருத்தியல் ரீதியாக வர்ணித்தார். வெறும் ‘திராட்சையும் ரொட்டியும்’ மட்டுமே அடிக்கடி உணவாக இருந்ததாக கமேனி கூறியிருந்தார். நான்கு வயதில் குர் ஆன் கற்கத் தொடங்கிய கமேனி, இஸ்லாமியப் பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்தார். 11 வயதில் மதகுருவாகத் தகுதி பெற்றார். பள்ளிப் படிப்பை முடிக்காமல் மதப் பள்ளிகளில் சேர்ந்து, தனது தந்தையைப் போன்று புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களிடம் கற்றார்.
கோம் (Qom) நகரில் படிக்கும்போது, ஈரானின் கடைசி மன்னரான ஷா-வின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மத அறிஞர்களுடன் நெருக்கமானார். அப்போது, இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த மதகுரு ருஹோல்லா கோமெய்னியிடம் கற்றார். அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய நீதியியல் மற்றும் இறையியல் விளக்க வகுப்புகளை எடுத்ததன் மூலம், மன்னராட்சி மீது நம்பிக்கை இழந்துகொண்டிருந்த இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்றார்.
1960-70-களில் ஷாவின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக ஆறு முறை சிறைக்குச் சென்றார். சித்திரவதை அனுபவித்ததுடன், தென்கிழக்கு ஈரானில் உள்ள ஈரான்ஷஹருக்கு நாடு கடத்தப்பட்டார்.
1979-இல் இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்றது. முடியாட்சி வீழ்ந்ததையடுத்து ருஹோல்லா கோமெய்னி ஈரானின் முதல் உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில் அண்டை நாடான ஈராக் படையெடுப்பைத் தொடர்ந்து, IRGC எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மேற்பார்வையாளராக கமேனி நியமிக்கப்பட்டார். அப்போது, கமேனி பல மாதங்கள் முன்னணிப் போர்க்களங்களில் இருந்து படை வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம், எதிர்க்கட்சிக் குழுவான முஜாஹிதீன்-இ கல்க் நடத்திய படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். டேப் ரெக்கார்டருக்குள் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் அவரது வலது கை முற்றிலுமாக செயலிழந்தது.
அதே ஆண்டு அக்டோபர் மாதம், அதிபர் மொஹம்மத்-அலி ரஜாய் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில், கொமெய்னியின் ஆதரவுடன் 97 சதவிகித வாக்குகள் பெற்று கமேனி அதிபரானார்.
1989-ஆம் ஆண்டு கொமெய்னி மறைவுக்குப் பின்னர், நிபுணர்கள் சபையால் உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கமேனி. ஆனால், கமேனியிடம் உயர்மட்ட ஷியா மதகுரு பட்டமான ‘ஹோஜதோல் இஸ்லாம்’ பட்டம் இருக்கவில்லை. எனவே, கமேனிக்காக அந்தத் தகுதியைத் தளர்த்தி அரசியலமைப்பு திருத்தப்பட்டது.
தான் பல குறைபாடுகளை கொண்ட ஒரு சிறிய மத அறிஞர் மட்டுமே என்று தனது முதல் உரையில் ஒப்புக்கொண்ட இவர், 1990களில் நாட்டை வலிமையாக கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தினார். 30 ஆண்டுகளில், நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகம், ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் தனது விசுவாசிகளின் வலையமைப்பை உருவாக்கினார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தடைகளை எதிர்கொள்ள எதிர்ப்புப் பொருளாதாரம் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
மனைவி, ஆறு குழந்தைகள் மற்றும் பல பேரக்குழந்தைகளுடன் டெஹ்ரானில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த கமேனி அரிதாகவே வெளிநாடுகளுக்குச் சென்றார்.
கவிதை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பெண்கள் கல்விகற்பதற்கான தடையை நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், பெண்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
2003 ஆம் ஆண்டு, அணு ஆயுதங்கள் தயாரிப்பது, பயன்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று ஃபத்வா பிறப்பித்தார். இருப்பினும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதத் திறனை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. 2015ஆம் ஆண்டு அமெரிக்கா – ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், 2018ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் பதற்றம் அதிகரித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், கடந்த ஜனவரியில் கமேனியின் ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்களைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார். “போர் தொடங்கினால், அது பிராந்தியப் போராக மாறும்” என எச்சரித்த கமேனி, யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்துவிட்டார். இந்நிலையில், மார்ச் 1 அன்று அமெரிக்க, இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 86 வயதான கமேனி கொல்லப்பட்டார்.

