AI-ஆல் பேராபத்து: ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து பதவி விலகிய மூத்த அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு..!
ஏஐ துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள ஆபத்துகள் குறித்து பகிரங்கமாக குற்றம்சாட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடி மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்த்த ஒரு நிறுவனம் தான் ஓபன் ஏஐ. இந்த நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் வெளிப்படைத்தன்மை தொடர்பான பணிகளை முன்னின்று கவனித்து வந்தவர் டேவிட் ராபின்சன். அவர் தி அட்லாண்டிக் இதழுக்கு எழுதிய கட்டுரையில், ஓபன்ஏஐ நிறுவனம் சோதனை மற்றும் தவறு (Trial and Error) என்ற முறையின் மூலமே இதுவரை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் வருங்காலத்திற்கும் இதே முறை செட் ஆகாது என கூறியுள்ளார். ஏனெனில் ஏஐ, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதீதமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த முறையில் ஏற்படும் தவறுகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை கொண்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு சோதனையில் ஓபன்ஏஐ-யின் AI அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறி சென்றதை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஓபன் ஏஐ அதனை தடுக்க தவறியதை விமர்சித்துள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனம் ஒரு தயாரிப்பு வெளியீட்டிலிருந்து மற்றொரு தயாரிப்பு வெளியீட்டிற்கு மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அதன் பாதுகாப்பு தரத்தை அடைவதில் தவறிவிடுகிறது என ராபின்சன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலாக, முதலில் பாதுகாப்பு பின்னர் தான் சோதனை , அதன் பின்னர் தான் நடைமுறை என்பதற்கு முன்னுரிமை தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
டேவிட் ராபின்சன் தனது கட்டுரையில், ஏஐ நிறுவனங்கள் சாதாரண நிறுவனங்களை போல செயல்படாமல், அணுசக்தி நிலையங்களை போலவே நிர்வகிக்கப்பட வேண்டும் என கூறுகிறார். அதாவது, மனிதர்களின் கவனக்குறைவு அல்லது தவிர்க்க முடியாத தவறுகள் எப்போதாவது நேர்ந்தாலும், அது பேரழிவிற்கு வழிவகுக்காதவாறு பல அடுக்கு பாதுகாப்பு முறைமைகளும், கவனமான நீண்ட கால திட்டமிடல்களும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில் AI நிறுவனங்களுக்கு இதனை எப்படி செய்வது என்று முழுமையாக தெரியவில்லை என்றாலும், மற்றவர்களிடம் அதற்குரிய வழிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே இப்படி கூறி இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே பல்வேறு முன்னணி ஏஐ நிறுவனங்களை சேர்ந்த பல ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவால் மனிதகுலத்திற்கே பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் ஒருநாள் மனிதகுலத்தையே கூண்டோடு அழிக்கக்கூடும் என சில ஊழியர்கள் பகிரங்கமாக கூறுகின்றனர். இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாரியோ அமோடே, அதிநவீன மாடல்களை உருவாக்கும் வேகத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தங்கள் தொழில்நுட்பத்தை சரிபார்க்க மூன்றாம் தரப்பு மதிப்பீட்டாளர்களை ஈடுபடுத்த போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

