குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.
இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீசியத்தைச் சேர்ந்த 7 பேர், 2 விமானகிள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருள் எரிந்ததால் வெப்பநிலை உச்சத்தை எட்டியதாகவும், இதனால், பயணிகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

