கோலாலம்பூர்:
கெடா மாநிலத்தில் ஏற்பட்டிருந்த வெள்ளநிலைமைகள் மெதுவாக சீராகும் நிலையில் உள்ளன, அதேவேளையில் பேராக் மாநிலத்தின் நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) வெளியிட்ட அறிக்கையின்படி, கெடாவில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி நிலவரப்பட, 61 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். இதற்கு முன்பு 81 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
பெந்தோங் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது, தானா மேரா விளையாட்டு வளாக மண்டபம், செக்கோலா கெபாங்சான் (SK) துங்கு இன்டன் ஷஃபினாஸ் ஆகிய இரண்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம், பேராக் மாநிலத்தில் வெள்ளநிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றமில்லை. மாநில JPBN செயலகம் தெரிவித்ததாவது, மஞ்சூங் மாவட்டத்தில் உள்ள செக்கோலா அகமா ரக்யாட் பாடாங் செராய் நிவாரண மையத்தில் தற்போது 33 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், கிந்தா மாவட்டத்தில் உள்ள சுங்கை கிந்தா அணையின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவாகிய 248.02 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக, இது சாதாரண அளவான 243.50 மீட்டரை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம் என நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) தெரிவித்துள்ளது.




