இந்தியாவில் 73 சதவீதத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் தங்களின் வேலை ஓய்வுக்குப் பிறகும் கூட, வேலை செய்வதில் ஆர்வம் காட்டினாலும், சுமார் 23.1 சதவீதம் பேர் மட்டுமே உண்மையில் ஓய்வு காலத்திற்கு பிறகும் கூட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் சர்வதேச முதியோர் தினத்தன்று வெளியிடப்பட்ட இந்த புள்ளிவிவரமானது இந்தியாவில் முதியவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற இது சார்ந்த ஆய்வில் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 10,000 நபர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பல மூத்த குடிமக்கள் போதுமான வருமான ஆதாரம் இல்லாமல் வாழ்வது கண்டறியப்பட்டது.
– 35.6 சதவீதம் பேர் அரசுகள் வழங்கும் ஓய்வூதியங்களை நம்பியுள்ளனர்
– 19 சதவீதம் பேர் முதியோர் ஓய்வூதியங்களை நம்பியுள்ளனர்
– 16.6 சதவீதம் பேர் தனிப்பட்ட சேமிப்பையே நம்பியுள்ளனர்
– 14.2 சதவீதம் பேர் குடும்ப ஆதரவை நம்பியுள்ளனர்
– கிட்டத்தட்ட 10 சதவீதம் பேருக்கு வழக்கமான வருமானமே இல்லை
வயதான குடிமக்கள் ஓய்வுக்கு பிறகும் கூட சம்பாதிக்க ஏன் விரும்புகிறார்கள் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது குறித்து பேசி இருக்கும் ஏஜ்வெல் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஹிமான்ஷு ரத், “நம் நாட்டு முதியவர்கள் ஓய்விற்கு பிறகான தங்கள் வாழ்வில் நிதி ஸ்திரத்தன்மையை மட்டுமல்ல, கண்ணியம், மரியாதை மற்றும் நோக்கம் கொண்டிருக்க விரும்புகிறார்கள். பாலிசி, corporate innovation மற்றும் குடும்ப ஆதரவு மூலம் இதற்கான வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பது அவர்களின் ஓய்வு காலத்தை சார்புநிலையிலிருந்து, அவர்களுக்கு அதிகாரமளிப்பதாக மாற்றும்” என்றார்.
ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான மூத்த குடிமக்கள் கட்டமைக்கப்பட்ட வேலைவாய்ப்பை பெற விரும்புவதாகவும், 69.8 சதவீதம் பேர் முறையான வேலைகளை பார்க்க விரும்புவதாகவும் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. தன்னார்வத் தொண்டு (30.7 சதவீதம்) மற்றும் விவசாயம் (22.7 சதவீதம்) உள்ளிட்ட பிற பிரபலமான விருப்பங்களையும் ஆய்வில் பங்கேற்றவர்கள் வெளிப்படுத்தினர். சுமார் 41.8 சதவீதம் பேர் ஓய்வுக்கு பிறகும் வேலைகளில் ஈடுபடுவது நீண்ட ஆயுளுடன் வாழ அவசியம் என்று கருதுகின்றனர்.
– 80.3 சதவீதம் பேர் வேலை வாய்ப்புகள் இல்லாததை குறிப்பிட்டு உள்ளனர்.
– 61.9 சதவீதம் பேர் நவீன காலத்திற்கான டிஜிட்டல் திறன்கள் போதுமான அளவு இல்லாததால் சவால்களை எதிர்கொள்கின்றனர்
– 57.9 சதவீதம் பேர் போக்குவரத்து அல்லது நடமாட்டத்தில் சிக்கல்களை கொண்டுள்ளனர்
– SACRED போர்டல் போன்ற அரசு முயற்சிகளைப் பற்றி 3.3 சதவீதம் பேர் மட்டுமே அறிந்திருக்கிறார்கள்
இந்த ஆய்வு குடும்பப் பிணைப்புகளில் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் விரிசல்களையும் எடுத்துக்காட்டியது. 12.5 சதவீதம் பேர் மட்டுமே தங்களின் இளைய குடும்ப உறுப்பினர்களுடன் தினசரி தொடர்பு கொள்வதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்களின் சில முக்கிய குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வதாக தெரிவித்தனர். வயதான முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் நிதி போராட்டங்கள், குடும்ப தொடர்பு இல்லாமல் தனிமை மற்றும் உடல்நலக் கவலைகள் ஆகியவை முக்கியமானவை என்று பதிலளித்தவர்களில் முறையே 54.6 சதவீதம், 44.9 சதவீதம் மற்றும் 34.7 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து கொள்கை வகுப்பாளர்களை கட்டமைக்கப்பட்ட மூத்த வேலைவாய்ப்புகளை உருவாக்க, மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை வடிவமைக்க நிறுவனங்களை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் கல்வியறிவு திட்டங்களை மேம்படுத்தவும், குடும்பங்களுக்குள் மரியாதையை வளர்க்க ஊக்குவிக்க குறிப்பிட்ட அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், நிலையான ஓய்வூதியத் திட்டமிடலுக்கான தேவையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. சுருக்கமாக சொன்னால் பல வயதான இந்தியர்களுக்கு, வேலை என்பது நிதி சார்ந்த தேவையாகவும், தங்கள் வாழ்வை கண்ணியமாக கொண்டு செல்வதற்கான ஆதாரமாகவும் உள்ளது.
October 14, 2025 12:26 PM IST

