Last Updated:
இந்த தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி இன்று துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் களம் கண்டன. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங், பௌலிங், பில்டிங் என அனைத்து துறைகளிலும் இந்திய அணி வலுவாக இருப்பதால் இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
இந்த தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் எந்த ஒரு வீரரும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா கோப்பையை வெல்லுதற்கு பாகிஸ்தான் அணி முழு முயற்சியை எடுக்கும்.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பாகிஸ்தான் பவுலர்கள் இன்னும் ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை வழங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், இந்திய அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவை முதல் 2 ஓவர்களில் வெளியேற்றிவிட்டால் இந்திய அணி தடுமாறும் என்று ஆலோசனை கூறியிருந்தார்.
September 28, 2025 3:58 PM IST


