Last Updated:
பாகிஸ்தான் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 6 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது.
பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டு பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை இயக்கத்தினர் (Balochistan Republican Guards) அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து இவர்கள் தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இந்த நிலையில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் (Sultan Kot) பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நிகழ்விடத்திற்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள பலூச் விடுதலை இயக்கத்தினர் பலூசிஸ்தான் சுதந்திரம் அடையும் வரை இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
October 07, 2025 10:26 PM IST


