Last Updated:
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ஏராளமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அங்கு, குஜராத்தை பூர்வீகமாக கொண்ட ராகேஷ் ஏகபன் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 51 வயதான இவர், ராபின்சன் டவுன்ஷிப் பகுதியில் சாலையோர ஓட்டலில் மேலாளாராக பணியாற்றி வந்தார்.
இந்த ஓட்டலுக்கு வெளியே வாடிக்கையாளர்கள் இருவர் திடீரென சண்டையிட்டுள்ளனர். உடனே, அங்கு சென்ற ராகேஷ் சண்டையை விலக்கி விட்டுள்ளார். ஆனால், சண்டையை விலக்கி விட்டதே அவருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. ஹோட்டலுக்கு வெளியே சண்டையிட்ட நபர் சிறிது தூரம் சென்ற பின், மீண்டும் ராகேஷை நோக்கி நடந்து வந்துள்ளார். அருகே வந்ததும் நீ நலமா என்று கேட்டதும், அந்த நபர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால், ராகேஷின் தலையில் சுட்டுள்ளார்.
இதில், தலையில் குண்டடிபட்டு ராகேஷ் அப்படியே கீழே சுருண்டு விழுந்துள்ளார். ஆனால், அந்த நபரோ ஒரு மனிதரின் உயிரை பறித்த எந்தவொரு பதற்றமும் இன்றி அங்கிருந்து நடையை கட்டியுள்ளார். பின்னர், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை சுட்டுப் பிடித்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 37 வயதான ஸ்டான்லி யூஜின் என்பது தெரியவந்தது அவர், ஓட்டலுக்கு வெளியே வேறொரு நபருடன் ஏன் சண்டை போட்டார்?
அதை தட்டிக் கேட்ட ராகேஷை ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடும் நோக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அண்மையில், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் மேலாளரான சந்திரமௌலி என்பவர், தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரின், மனைவி மற்றும் மகன் கண் முன்னே சக ஊழியர் கொலைவெறிச் சம்பவத்தில் ஈடுபட்டது குலைநடுங்க வைத்தது.
இதே நகரில் ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர் சந்திரசேகர் போலே என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தற்போது, ஓட்டல் மேலாளரான ராகேஷ் என்பவரை, இளைஞர் ஒருவர் எந்தவொரு அச்சமின்றி சுட்டுக் கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாக அதிர்வைலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்தியர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
எனவே, இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நோக்கில், குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
October 08, 2025 2:23 PM IST
சண்டையை விலக்கி விட்டதால் இந்தியர் சுட்டுக் கொலை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் – ஷாக் வீடியோ