பஞ்சாபில் உள்ள ரோபர் ரேஞ்சில் டிஐஜி ஆக உள்ள அதிகாரி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டதாக தொடங்கப்பட்ட ஒரு வழக்கு, மிகப்பெரிய கணக்கில் காட்டப்படாத சொத்துப் பட்டியலை அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம், சொகுசு வாகனங்கள், நகைகள் மற்றும் உயர் ரக கடிகாரங்கள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன.
2009-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர், அவரது இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிருஷ்ணா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் தொழிலதிபர் ஒருவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை முடித்து வைக்க இந்த இடைத்தரகர் மூலம் லஞ்சம் கேட்டுப் பெற்றுக்கொண்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ஃபதேகர் சாஹிப்பைச் சேர்ந்த ஆகாஷ் பட்டா என்ற ஸ்கிராப் வியாபாரி அளித்த புகாரின் பேரில் சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்தது.
முதற்கட்டமாக ரூ.8 லட்சம் லஞ்சம் கொடுப்பதோடு மாதா மாதா பணம் கொடுக்காவிட்டால், வணிக நடவடிக்கைகள் தொடர்பான போலி வழக்கில் தன்னை சிக்க வைப்பேன் என டிஐஜி மிரட்டுவதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, புகார்தாரரிடமிருந்து டிஐஜி சார்பாக அவரது இடைத்தரகர் கிருஷ்ணா ரூ.8 லட்சத்தை வாங்கும்போது சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
புகார்தாரருக்கும் டிஐஜிக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல்களையும், அதில் பணம் பெற்றதை அதிகாரி ஒப்புக்கொண்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், சிபிஐ குழு டிஐஜி புல்லரை மொஹாலியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்தது. கைது நடவடிக்கையை தொடர்ந்து டிஐஜிக்கு தொடர்புரைய பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது கிடைத்தவை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுக்கட்டாக ரூ.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்க நகைகள், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் அசையா சொத்துகளுக்கான ஆவணங்கள், பென்ஸ், ஆடி என விலை உயர்ந்த கார்கள், 22 உயர் ரக கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், டபுள் பேரல் ஷார்ட் கன், பிஸ்டல், ரிவால்வர் மற்றும் ஏர்கன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுபோக இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணா வீட்டில் இருந்தும் ரூ.21 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்த ஹர்சரண் பல முக்கிய பதவிகளில் வசித்து இருக்கிறார். குறிப்பாக சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியாவுக்கு எதிரான உயர்மட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவை வழி நடத்தியதும் இவர்தான். மாநிலம் முழுவதும் போதைப்பொருள் வலையமைப்பை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரமான ‘யுத் நஷேயன் விருத்’ என்ற அமைப்பிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இவர் பஞ்சாப் முன்னாள் டிஜிபி எம்எஸ் புல்லரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. டிஐஜி ஹர்சரண் சிங், இடைத்தரகர் கிருஷ்ணா ஆகிய இருரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். ஹர்சரண் சிங்கின் லஞ்சக் கரங்கள் எவ்வளவு ஆழமாக நீண்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்காக சோதனை பணிகள் தொடர்வதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டதாக தொடங்கப்பட்ட ஒரு வழக்கு, மிகப்பெரிய கணக்கில் காட்டப்படாத சொத்துப் பட்டியலை அம்பலப்படுத்தியுள்ளது.
October 17, 2025 6:41 PM IST
ரூ.5 கோடி ரொக்கம்.. அணிவகுத்து நின்ற சொகுசு கார்கள்.. கட்டி கட்டியாக தங்கம்.. டிஐஜி வீட்டு ரெய்டில் அதிர்ச்சி!

