அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தை தலையிடமாக கொண்டு 1886- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். ராபர்ட் வூட் ஜான்சன், ஜேம்ஸ் வூட் ஜான்சன், எட்வர்ட் மீட் ஜான்சன் என்ற மூன்று சகோதரர்கள் இந்த நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் கிளைகளை பரப்பினர். குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பு, சோப், மசாஜ் ஆயில் என விதவிதமான பொருட்களை தயாரித்து தாய்மார்களின் பெரும் ஆதரவை பெற்றது.
1999ஆம் ஆண்டு டயான் பெர்க் (Diane Berg) என்ற கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்க் தயாரிப்பைப் பயன்படுத்தியதால் தனக்கு நோய் வந்ததாகக் கூறி, அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதற்கு முன்பாகவே, The Lancet மற்றும் அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் பயன்படுத்துவதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்களை வெளியாகின.
வழக்கு தொடர்ந்த டயான் பெர்க்-கிற்கு சுமார் 12 கோடி ரூபாய் இழப்பீடு தர ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முன்வந்தது. ஆனால், அதை டயான் பெர்க் நிராகரித்து விட்டார்.
டயான் பெர்க் தொடர்ந்த வழக்கில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. டால்க் பவுடர் பயன்பாட்டால் கருப்பை புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நுகர்வோருக்கு போதுமான எச்சரிக்கை அளிக்க நிறுவனம் தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் கூறினர்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் டால்க் பவுடரின் அபாயத்தை நிரூபித்த முதல் தீர்ப்பு இது என்பதால், பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. இதுவே, பின்னாட்களில் அந்நிறுவனத்திற்கு எதிராக பல பில்லியன் டாலர் அபராதங்கள் விதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு வழி வகுத்தது. சர்ச்சை மற்றும் ஆயிரக்கணக்கான வழக்குகளால், 2023-ஆம் ஆண்டு, டால்க் அடிப்படையிலான பவுடர் தயாரிப்பை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில், மே மூர் (Mae Moore) என்ற பெண்ணின் குடும்பத்தினர் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். டால்க் அடிப்படையிலான பேபி பவுடரில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் காரணமாக மே மூருக்கு மெசோதெலியோமா என்ற அரிய வகை புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 966 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 8,576கோடி ஆகும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், அவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்றும், புற்றுநோயை ஏற்படுத்தவில்லை என்றும் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
October 09, 2025 7:08 AM IST
ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கேன்சர்.. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.8,000 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!